Doctor Vikatan: கருத்தரிப்பதில் பெண்ணின் வயது முக்கியம் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா.... ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைபெற , குறிப்பாக ஆரோக்கியமான குழந்தை பெற தகுதியானவர்களாக இருப்பார்களா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, தாயின் வயது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது. உண்மையில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதில் பெண்ணின் வயது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆணின் வயதும் முக்கியமே.
இந்தக் காலத்தில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலை, பொருளாதார ரீதியான நிறைவு, வாழ்க்கையில் செட்டிலாவது என பல காரணங்களுக்காக திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைப்பேறும் தள்ளிப்போகிறது. பெண்களுக்கு வயதாக, ஆக கருமுட்டைகளின் இருப்பு எப்படி குறைந்துகொண்டே வருமோ, ஆண்களுக்கும் சில விஷயங்களில் பிரச்னை ஏற்படும்.
அதாவது, வயதாக ஆக, உயிரணுக்களின் தரம் குறையும். விந்தணுக்களின் அளவும் குறையத் தொடங்கும். அது மட்டுமன்றி உயிரணுக்களில் மரபணு ரீதியான திரிபு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக, உருவாகும் கருவானது தரமற்றதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வயது முதிர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள் வரலாம். லுகிமியா உள்ளிட்ட புற்றுநோய்கள் தாக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஸ்கீஸோஃபெர்னியா, ஆட்டிசம் போன்ற நரம்பியல் பாதிப்புகளுக்கும் அந்தக் குழந்தை உள்ளாகலாம். குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படலாம். தாய்க்கு குறைப் பிரசவம் நிகழலாம்.
எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, சரியான வயதில் உள்ள ஆணைத் திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment