Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது உடல்வலி, தலைவலி வருகிறதே... அந்த நேரத்தில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது உதவுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
காய்ச்சல் வரும்போது உடல்வலி இருப்பது இயல்புதான். பெரும்பாலான மக்களும் காய்ச்சல் இருப்பதை மருத்துவரிடம் சொல்லாமல், கை, கால் வலி, முதுகுவலி, வயிற்றுவலி, தலைவலி என ஏதோ ஒரு வலியை பிரதானப்படுத்தியே மருந்து கேட்பதைப் பார்க்க முடிகிறது.
மருத்துவர்களை அணுகும்போது, இருமல், சளி, மூக்கடைப்பு இருக்கிறதா என்றுதான் நோயாளிகளிடம் முதலில் கேட்பார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் சுவாசப்பாதையில் கிருமிகள் இருக்கின்றனவா என்று பார்ப்போம். வயிற்றுவலியோ, வாந்தி, பேதியோ இருப்பதாகச் சொன்னால் குடலில் கிருமிகள் இருக்கலாம் என சந்தேகப்படுவோம்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தாலோ, அடி வயிற்றில் வலி இருந்தாலோ சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று இருக்கிறதா என பார்ப்போம். பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருப்பதாகச் சொன்னால் பிறப்புறுப்பிலோ, கர்ப்பப்பை, சினைப்பை பகுதிகளிலோ கிருமிகள் இருக்கின்றனவா என பார்ப்போம். கை, கால்களில் புண்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து நெறி கட்டி வலியும் காய்ச்சலும் ஏற்பட்டிருக்கலாம்.
ஏற்கெனவே சைக்கிள் ஓட்டுபவராக இருந்து அவருக்கு மூட்டுவலி இருந்தால், காய்ச்சலின்போது அவருக்கு அந்த வலி இன்னும் அதிகமாக இருக்கலாம். காய்ச்சலைக் குறிப்பிடாமல், மூட்டுவலியை மட்டும் குறிப்பிட்டால், அனுபவமற்ற பெரும்பாலான மருத்துவர்கள் வலி நிவாரணிகளையே பரிந்துரைப்பார்கள். அது காய்ச்சலையும் குணப்படுத்தாது, வயிற்று வலியையும் ஏற்படுத்திவிடும்.
எனவே காய்ச்சல் வந்தால் உடல்வலி இருக்கும், ஏற்கெனவே வலி உள்ளவர்களுக்கு அந்தப் பகுதிகளில் வலி இன்னும் சற்று அதிகமாக இருக்கும் என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வலியை மட்டுமே பிரதானப்படுத்தி மருத்துவரிடம் சொல்லும்போது நீங்களாகவே வலி நிவாரணிகளைப் பரிந்துரைக்க மருத்துவரை மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். தேவையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது சரியானதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் காய்ச்சல் மருந்தை எடுத்துக்கொண்டாலே சிலமணி நேரத்தில் வலி சரியாவதை உணர்வீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment