மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு போன்ற பிரச்னைகள் பரவலாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில், ``தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஃப்ளூ காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று என்று தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின்றன.
ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால்.
''குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம்.
Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். தற்போது இன்ஃப்ளூயென்சா வைரஸ் மட்டுமன்றி H1N1 மற்றும் H3N2 ஆகிய வைரஸ் மூலமாகவும் ஃப்ளூ காய்ச்சல்கள் பரவி வருகின்றன.
இந்த வைரஸ் காய்ச்சலானது, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. பொதுவாக ஏழு நாள்களுக்கு காய்ச்சலின் தாக்கம் இருக்கும்.
உயர் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, இதயநோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது மிகவும் அவசியம் ஆகும்.
ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்:
1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
2. தொண்டை வலி இருந்தால் வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும்.
3. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதும் நல்லது.
4. வைட்டமின்- சி மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
5. முக்கியமாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டால் நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
6. இருமும்போதும் தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
7. இந்தியாவில் இன்ஃப்ளூயென்சா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. இருப்பினும் முதியோர், இதயநோய், HIV தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேவைப்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். உடல்வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்பதால் போதிய ஓய்வு எடுக்க வேண்டும்.
தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்றபடி செயல்பட்டால் இம்மாதிரியான நோய்கள் பரவுவதைத் தவிர்க்கவும், பாதிப்பு ஏற்பட்டால் எளிதில் குணமடையவும் முடியும்" என்றார்.
Comments
Post a Comment