'அவங்க குரல் கிளி மாதிரி இருக்கும்', 'அவரு பேசுனாலே கணீர்னு இருக்கும்', 'தொண்டை கட்டிடுச்சு...அதனால தான் குரல் இப்படி இருக்கு' என்று நம்மை அறியாமலே குரல் மீது அதிக ஈர்ப்பும், கவனமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட குரலைப் பராமரிக்க சென்னையில் உள்ள 'The Base ENT' மருத்துவமனையில் புதியதாக 'Voice Wellness Clinic' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Voice Wellness Clinic குறித்தும், குரல் பராமரிப்பு குறித்தும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் நரேந்திரன் கூறுகிறார்...
''எல்லாருக்கும் குரல் என்பது மிக முக்கியம். அதுவும் மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு குரல் இல்லாமல் வேலையே இல்லை. அதனால் இவர்களுக்கு தொண்டை கட்டல், தொண்டை அடைத்தல், தொடர்ந்து பேசும்போது இருமல், குரல் கம்மல் ஆகிய பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். இந்தப் பிரச்னைகள் மிகவும் மோசமாகும்போது தான் இவர்கள், டாக்டர்களிடமே செல்வார்கள்.
இந்த மாதிரி இல்லாமல் குரல் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும், எந்தப் பிரச்னையும் வராமல் தடுக்கவும் மாஸ்டர் வாய்ஸ் செக் அப் எடுப்பது தான் வாய்ஸ் வெல்னெஸ் கிளினிக்கின் முக்கிய நோக்கம்.
எதனால் குரல் பாதிப்பு ஏற்படுகிறது?
பலரும் உடலுக்கு தரும் முக்கியத்துவத்தை குரலுக்குத் தருவதில்லை. சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, அதிக சத்தத்துடன் பேசுவது, அதிகம் பேசுவது, மது குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவை குரல் பாதிப்பதற்கு முக்கிய காரணங்கள்.
நாம் சரியாக சாப்பிடாத போது, வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டைக்கு ஏறி குரல் வளையை பாதித்து, குரலை மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ், வெந்நீர்...
ஐஸ்கிரீம் சாப்பிட்டால்...கூல் டிரிங்க்ஸ் குடித்தால் அனைவருக்கும் குரல் பாதிக்கும் என்பதில்லை. ஆனால் குரல் பாதித்தால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பொதுவாக குரல் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு குரல் நன்றாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம். அதனால் இவர்கள் குளிர்ந்த உணவுகள், கார உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சுடுதண்ணீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சுடு தண்ணீர் அப்போதைக்குதான் தீர்வைத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
வாய்ஸ் வெல்னெஸ் கிளினிக் என்றதும் சிகிச்சை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது மாஸ்டர் வாய்ஸ் செக் அப் செய்வதற்கான இடம். கிளினிக்கிற்கு வந்தால் குரலைப் பரிசோதித்து, அவர்களுடைய லைஃப்ஸ்டைலை கேட்டறிந்து உணவுமுறை ஆலோசனைகள் கொடுக்கப்படும். மேலும் ஒவ்வொருவரின் குரல் சம்பந்தமான ரெக்கார்டும் பராமரிக்கப்படும்" என்று விளக்கினார்.
Comments
Post a Comment