பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதில் இருந்து அங்கு நடக்கும் பல விஷயங்கள் மக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
யாரை வீழ்த்த வேண்டும், யாரை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சிந்தித்து காய் நகர்த்தி ஆட்டத்தை விறுவிறுவாக்குபவர் மாயா. என்னதான் ஹவுஸ்மேட்ஸ் சொல்வது போல் இவர் விரிக்கும் வலைக்குள் இவரே விழுந்தாலும் ஆட்டத்தை கச்சிதமாகப் புரிந்து கொண்டவர்களில் மாயாவும் ஒருவர். இவர் உள்ளே இருக்கும்வரை ட்விஸ்ட்களுக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களுக்குப் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வெற்றி, தோல்வி, சிறந்த பர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் அவர்களுக்கு ஸ்டார்கள் வழங்கப்படும்.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் `பூகம்பம் டாஸ்க்’ விளையாடப்பட்டது. போட்டியாளர்கள் தங்களது வாழ்வை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வை சக போட்டியாளார்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பூகம்பம் டாஸ்க்கில், மாயா தனது கல்லூரி வாழ்க்கை, அம்மாவின் உடல்நலச் சிக்கல், படிப்பதில் ஏற்பட்ட சிரமம் போன்றவற்றை பேசி இருந்தார். அப்போது, தனக்கு சிறுவயதில் ஏடிஹெச்டி சிண்ட்ரோம் (ADHD Syndrome) இருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார்.
ஏடிஹெச்டி பாதிப்பு ஏற்பட என்ன காரணம், அதன் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த விரிவான விளக்கத்தை மனநல மருத்துவர் பூங்கொடி பாலா பகிர்கிறார்...
``ஏடிஹெச்டி மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. இதை டெவெலப்மென்டல் கன்டிஷன் (Developmental Condition) என்போம். பிறந்ததில் இருந்தே இந்தப் பிரச்னை இருக்கும்.
AD என்பது கவனக்குறைவு (Attention Deficit); HD என்பது ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Hyperactivity disorder).
ஏடிஹெச்டி பாதிப்புள்ள குழந்தைகளுக்குக் கவனக் குறைவு இருக்கும். எளிதாக டிஸ்ட்ராக்ட் ஆகி விடுவார்கள். துறுதுறுவென இருப்பார்கள். ஹைப்பர் ஆக்டிவிட்டி அதிகமாக இருக்கும். மற்ற குழந்தைகள் அரை மணிநேரம் உட்கார்ந்து பாடத்தை கவனித்தால், இந்தக் குழந்தைகள் 10 நிமிடம் கூட உட்கார மாட்டார்கள். எழுந்து ஓடிக் கொண்டே இருப்பார்கள்.
அதோடு சட்டெனெ கட்டுப்பாடு இல்லாமல் ரியாக்ட் (Impulsivity) செய்து விடுவார்கள். உதாரணத்திற்கு தவறு எனத் தெரிந்தால் உடனடியாக கோபமடைவது, எதையாவது தூக்கி வீசுவது போன்றவற்றைச் செய்வார்கள். அதன்பிறகு மன்னிப்பும் கேட்பார்கள். சில நேரங்களில் கடகடவெனப் பேசுவார்கள்.
லேசான மற்றும் கடுமையான தீவிர நிலைகள் இதில் இருக்கின்றன. லேசான நிலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர், அந்தச் சூழலோடு ஒத்துப்போய் படிப்படியாக குணமடைவார்கள். தீவிர நிலையில் இடையூறு விளைவிக்கும் நடத்தையோடு (Disruptive Behaviour) இருக்கும்பட்சத்தில், மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
குழந்தைக்கான மனநல மருத்துவர் இவர்களை பரிசோதித்து ஆக்குபேஷனல் தெரபி (Occupational therapy) வழங்குவார். இந்த தெரபியில் குழந்தை உட்காராமல் ஓடிக்கொண்டே இருந்தால், சிறிது நேரம் உட்காரும் அளவிற்குப் பயிற்சி கொடுக்கப்படும். அவர்களின் நிலையைப் பொறுத்து சில நேரங்களில் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.
மருந்துகளை பொறுத்தவரையில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படும். அவர்களின் நிலைக்கு ஏற்ப தெரபி அல்லது மருந்துகள் கொடுக்கப்பட்டும். இயற்கையாகவே குழந்தை வளர வளர ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைந்துவிடும். அதுவே கவனம் மேம்படுமா என்றால் சிலருக்கு மாறலாம், சிலருக்கு படிப்பதில் பிற்காலத்தில் பிரச்னை வரலாம். ஃபோகஸ் குறையலாம். இரண்டு விஷயங்களைச் சொன்னால் ஒன்றை மறந்து ஒன்றை மட்டும் செய்யலாம்.
இவர்களுக்குக் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களோடு இருந்தால் எளிதாக கவனச் சிதறல் ஏற்படலாம். மருந்து, அல்லது கவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதலில் பெற்றோர்கள் இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பலரும் இப்படி இருக்கும் குழந்தைகளை `குறும்புக்கார குழந்தை’ என்றுதான் சொல்லுவார்கள். குழந்தைக்கு இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று புரிந்து கொள்ள மாட்டார்கள். எனர்ஜி அதிகமாக இருக்கும் குழந்தைகளை, `தூங்குவதே இல்லை, இரவெல்லாம் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள்' எனப் பெற்றோர்கள் கூறுவதுண்டு. அவர்களை நன்றாக விளையாட விடலாம். அப்போது எனர்ஜி குறைந்து தூங்குவார்கள்.
இந்த பாதிப்பு ஏற்பட பல காரணிகள் இருக்கலாம். பரம்பரையாக வரலாம், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வரலாம், பிறக்கும் போது உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், மூளையில் உள்ள சில ரசாயனங்கள் குறையும்போதும், ரசாயனங்கள் சமநிலையில் இல்லாத போதும் வரலாம், பிறக்கும்போது அல்லது பிறந்த பிறகு மூளையில் டேமேஜ் (brain damage) ஏற்பட்டாலும் வரலாம்.
இது தவிர ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள், IQ குறைவாக உள்ள குழந்தைகள், படிப்பதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகளோடு கூடுதலாக ஏடிஹெச்டி பாதிப்பும் வரலாம்’’ என்றார்.
அனைத்து மனிதர்களின் பின்னும் ஒரு கதை இருக்கிறது, கஷ்டம் இருக்கிறது. அவையே பல நேரங்களில் அந்த மனிதரின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்திருக்கிறது. நம்பிக்கையோடு இருப்போம்...
பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை தாக்குப்பிடிப்பார் என்று நீங்கள் நினைப்பது யாரை? கமென்டில் சொல்லுங்கள்!
Comments
Post a Comment