நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார்.
''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார்.
உங்களுக்கு ஓர் ஆச்சர்யமான விஷயத்தை சொல்கிறேன். இந்தக் காலத்திலும், 'முதலிரவில் என் மனைவிக்கு ரத்தம் வரவில்லை' என்ற புகாருடன் வருடத்துக்கு குறைந்தது பத்து கணவர்களாவது என்னிடம் வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும், ரத்தம் வராததற்கான அறிவியல் காரணங்களை எடுத்துச்சொல்லி அனுப்பி வைக்கிறேன்.
திருமணமாகாத இளைஞர்களுக்கு ஒரு விஷயம். எல்லா பெண்களுக்குமே பிறப்புறுப்பு இறுக்கமாக இருக்காது. சிலருக்கு பிறப்புறுப்பே தளர்வாகத்தான் இருக்கும். இதற்கு அப்படியே எதிராக 5 சதவிகித பெண்களுக்கு பிறப்புறுப்பு மிகவும் இறுக்கமாக இருக்கும். எப்படி வண்டி ஓட்டுவதாலும், விளையாட்டுகளில் ஈடுபடுவதாலும் கன்னித்திரை கிழியுமோ, அதேபோல பெண்ணுறுப்பு சற்று தளர்வதும் சில பெண்களுக்கு நிகழும். சுய இன்பம் செய்கிற பெண்களுக்கும் பெண்ணுறுப்பு தளர்வாக இருக்கும். இவையெல்லாமே இயல்பானவைதான்.
சமூகத்தில் கன்னித்திரை பற்றி ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டது என்றாலும், இந்தத் தளர்வு தொடர்பான சந்தேகங்கள் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கும் கன்னித்திரை கிழிவதற்கான அதே காரணங்களே பொருந்தும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு, திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே அதை அழித்துக்கொள்ளாதீர்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Comments
Post a Comment