Doctor Vikatan: சர்க்கரைநோயாளிகளும் இதயநோயாளிகளும் ரத்த தானம் செய்யலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இதயநோய் என்றால் பொதுவாக இதயத்தில் ரத்தக்குழாய்களின் அடைப்பு பற்றி பேசுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட நபர், ஆஞ்ஜைனா எனப்படும் நெஞ்சுவலி இல்லாமல் ஆறு மாதங்கள் நிலையாக இருப்பவரா என்று பார்க்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை.
அப்படியானால் இதயநோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் எடுப்பவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற கேள்வியும் அடுத்து சிலருக்கு வரலாம். அப்படி அவர்கள் எடுத்துக்கொள்வது ரத்தம் உறைதலைத் தடுப்பதற்கான மருந்து, மாத்திரைகளாக இல்லாத பட்சத்தில் ரத்த தானம் செய்வதில் சிக்கல் இருக்காது.
இதயநோயாளிகள் கடந்த ஆறு மாத காலத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ, ஸ்டென்ட் வைத்துக்கொண்டிருந்தாலோ, ஆறு மாதங்கள் காத்திருந்து, அதன் பிறகு ரத்த தானம் செய்யலாம், தவறில்லை.
நீரிழிவுநோயாளிகளுக்கும் கிட்டத்தட்ட இதே விதிமுறைதான். அவர்களுக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறது, அது திடீரென ஏறி, திடீரென இறங்கி தாறுமாறாக மாறுவதில்லை என்ற நிலையில் ரத்த தானம் செய்வதில் பிரச்னை இருக்காது.
இதயநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்வது பற்றி பேசும் நாம், ரத்த அழுத்த நோயாளிகள் ரத்த தானம் செய்வது பற்றியும் யோசிக்க வேண்டும். ரத்த அழுத்தம் மிக அதிகமாகவோ, மிகவும் குறைவாகவே இருந்தாலும் ரத்த தானம் செய்யக்கூடாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment