Doctor Vikatan: கடந்த வாரம் எனக்கு சரும அலர்ஜி வந்தது. அதற்காக சரும மருத்துவரை அணுகியபோது, 10 நாள்களுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளச் சொன்னார். இரண்டு நாள்கள் அந்த மாத்திரைகளை எடுத்த நிலையில் வைரல் ஃபீவர் வந்தது. அதற்காக பொது மருத்துவரை அணுகிய போது அவரும் ஆன்டிபயாடிக் பரிந்துரைத்தார்.
ஒரே நேரத்தில் இரண்டு பிரச்னைகளுக்காக இருவேறு ஆன்டிபயாடிக் எடுப்பது சரியா? சரும மருத்துவர் தான் பரிந்துரைத்ததை எடுக்க வேண்டாம் என்கிறார். பொது மருத்துவரோ இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார். இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``இதில் இரண்டு, மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. தேவை ஏற்படும்போது ஒரே நேரத்தில் இரண்டு ஆன்டிபயாடிக் எடுப்பது தவறில்லை. அதாவது ஒன்றுடன் இன்னொன்று ரியாக்ட் செய்யும், ஒன்றை எடுப்பதால் இன்னொன்றின் வீரியம் குறையும், வேலை செய்யாது, ஒவ்வாமை வரும் என்ற நிலையில் அது குறித்து யோசிக்கலாம்...இப்படி எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு ஆன்டிபயாடிக் எடுக்கலாம்.
ஆன்டிபயாடிக் எடுப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றை ஐந்து நாள்கள், பத்து நாள்கள் எடுக்க வேண்டும் என ஒரு விதி உண்டு.
மருத்துவர் குறிப்பிடும் நாள்களுக்கு அந்த ஆன்டிபயாடிக்கை எடுத்து முடித்துவிட வேண்டும். பிரச்னை சரியாகிவிட்டதே என அதைப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்த முறை அந்த ஆன்டிபயாடிக் உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். அதைவிட வீரியமான ஆன்டிபயாடிக் உங்களுக்குத் தேவைப்படலாம்.
எனவே உங்கள் பொது மருத்துவர் அறிவுறுத்தியபடி இரண்டு ஆன்டிபயாடிக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அவர் இரண்டு ஆன்டிபயாடிக்குகளின் தன்மையையும் வீரியத்தையும் பார்த்துதான் உங்களுக்கு அப்படி அறிவுறுத்தியிருப்பார். எனவே இரண்டையும் மருத்துவர் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுத்து முடித்துவிடுவதுதான் நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment