Doctor Vikatan: என் வயது 60. ரத்தச் சர்க்கரை அளவு 360 இருந்தது. இரண்டு கண்களிலும் கண்புரை இருந்தது. அதை சரிசெய்வதற்கான ஆபரேஷன் செய்ய தினமும் இரண்டு வேளை இன்சுலின் ஊசி போடச் சொன்னார் மருத்துவர். அதையடுத்து ரத்தச் சர்க்கரை அளவு 180 ஆகக் குறைந்தது. கண்புரை நீக்க ஆபரேஷனும் முடிந்துவிட்டது. இனி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தலாமா... பழையபடி மாத்திரை மட்டும் சாப்பிடலாமா?
- Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவானது 360- ஆக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது மிகவும் மோசமான அளவு. கட்டுப்பாடற்ற ரத்தச் சர்க்கரை அளவை அறுவை சிகிச்சைக்காக இன்சுலின் ஊசி போட்டுக் குறைத்திருக்கிறீர்கள். அறுவை சிகிச்சை முடிந்துவிட்ட நிலையில் தற்போது உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு என்னவென்று தெரியவில்லை.
நீங்கள் உங்கள் நீரிழிவுநோய் மருத்துவரிடம் அடிக்கடி ஆலோசனை பெறுகிறீர்களா என்றும் தெரியவில்லை. உங்களுடைய சர்க்கரைநோய் பின்னணி தெரிந்த அவர்தான், அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதையும் முடிவுசெய்வார். ஹெச்பிஏ1சி ( HbA1C ) என்ற டெஸ்ட்டை செய்து பார்ப்பதன் மூலம், உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள முடியும்.
டெஸ்ட் ரிசல்ட்டின் அடிப்படையில், ஒருவேளை உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பது தெரிந்தால், இன்சுலினை நிறுத்திவிட்டு மறுபடி மாத்திரைகளைத் தொடர உங்கள் நீரிழிவு மருத்துவர் அறிவுறுத்துவார். அப்படியில்லாமல் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகவே இருப்பது தெரிந்தால், இன்சுலின் ஊசியை தொடரவும் அறிவுறுத்துவார்.
எனவே இந்த விஷயத்தில் முடிவெடுப்பதும் அறிவுறுத்துவதும் உங்களுடைய நீரிழிவு மருத்துவரின் கையில்தான் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட இடைவெளிகளில் நீரிழிவு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
ரத்தச் சர்க்கரையின் ஏற்ற, இறக்கத்துக்கேற்ப, நீங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் தேவையா என்பதை மருத்துவர் முடிவுசெய்வார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment