கரும்பு மற்றும் நெற்பயிர்களை எரிப்பதால் சிறுநீரக நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கரும்பு மற்றும் நெற்பயிர்களை எரிப்பதால் அவற்றிலிருந்து நச்சுப்பொருள் வெளியாவதாகவும், இதனால் இந்தியா, இலங்கை, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உள்ள விவசாயத் தொழிலாளர்களிடையே மர்மமான சிறுநீரக நோய் ஏற்படுகிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், உலகெங்கிலும் உடலுழைப்பை அதிகம் செலுத்தி வேலை செய்யும் விவசாயிகளிடையே நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பதைக் காணமுடிகிறது.
வெப்ப அழுத்தம், காலநிலை மாற்றம் ஆகியவை இத்தகைய சிறுநீரகத் தொற்றுநோய்க்குக் காரணமாக இருந்தாலும், கரும்பு சாம்பலில் இருந்து வெளியிடப்படும் சிறிய சிலிக்கா துகள்களும் ஒரு காரணமாக இருக்கிறது. இது சுவாசத்தின் மூலமாகவோ அல்லது மாசுபட்ட குடிநீர் மூலமாகவோ மனிதருக்குள் சென்று நீண்டகால சிறுநீரக பாதிப்பை உண்டாக்குகிறது.
மற்ற சிறுநீரக நோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில் குறிப்பிடத்தக்க அளவு சிலிக்கா துகள்கள் இருப்பதைக் காண முடிகிறது.
நெற்பயிர்களில் வேலை செய்பவர்களும் இவ்வித பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக நெற்பயிர்களை எரிக்கும் போதும் சிலிக்கா கொண்ட சாம்பல் வெளிப்படலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாரெட் பிரவுன் கூறுகையில், `` அறியப்படாத இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில், நச்சுத்தன்மையை அடையாளம் காணக்கூடிய எந்த ஆய்வும் இன்றுவரை இல்லை.
ஆனால் தற்போதுள்ள தரவின்படி காலநிலை மாற்றம், வெப்ப அழுத்தம் உள்ள சூழலில் கரும்பை எரிப்பதால் உண்டாகும் சாம்பலில் இருந்து வெளியேறும் நச்சுகளும் மர்மமான சிறுநீரக நோய்க்குக் காரணமாகலாம் என்று அறியப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment