தன்பாலின ஈர்ப்புக்கொண்ட ஆண்கள், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் வரக்கூடிய சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
''ஓர் இளம்பெண் என்னை சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குத்தான் பிரச்னைபோல... அதனால்தான் என்னை சந்திக்க தனியாக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், பேசிய பிறகுதான் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது புரிந்தது. அந்தப் பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகியிருந்தது. ஆனால், இதுவரைக்கும் தாம்பத்திய உறவு நிகழவில்லை. அதற்கான எந்த முயற்சிகளையும் அவருடைய கணவர் எடுக்கவே இல்லையாம்.
'எங்களோடது பெற்றோர் பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம். என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டுதல் இல்லாமதான் இருந்தார். தவிர, எப்போ பார்த்தாலும் செல்போனை கையிலேயே வெச்சிக்கிட்டிருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருப்பார் போல... அதனாலதான் என்கூட சேர்றதுக்கு தயங்கறாருனு நினைச்சிக்கிட்டேன். ஒரு நாள் அவர் குளிக்க போனப்போ, அவரோட எக்ஸ் யாரு; அவங்க கூட தான் தினமும் பேசிக்கிட்டிருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவரோட போனை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள அப்படியொரு ஷாக் இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை டாக்டர். இந்தாங்க, அவர் செல்போன்ல இருந்த கண்றாவியையெல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்களே பாருங்க' என்று என்னிடம் காண்பித்தார்.
அத்தனையும் ஹோமோசெக்ஸ் வீடியோக்கள். அவருக்கு சில ஆண் நண்பர்களுடனும் உறவு இருந்திருக்கிறது. அந்த சாட்டிங்குகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வந்திருந்தார் அந்தப் பெண். உண்மையில் ஹோமோசெக்ஸ் தவறில்லை. ஆனால், அதில் ஆர்வமிருக்கிற ஆண், அதை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை வீணாக்கியிருக்கியதுதான் தவறு. பெற்றோர்கள் வற்புறுத்தினாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில் இவர்கள் தீர்மானமாக இருக்க வேண்டும். 'பெற்றோர்கிட்ட சொல்ல தைரியமில்ல... சொன்னா, அவங்களால தாங்க முடியாது... அது அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும்...' என்று பயப்படுகிற ஆண்கள், திருமணம் செய்துகொள்ளவிருக்கிற பெண்ணுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், ஆண், பெண் இருவருடனும் உறவு வைத்துக்கொள்வார்கள். இவர்களால் மனைவியுடனும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியும். இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தன்பாலின ஈர்ப்பு மட்டுமே இருக்கிறது... பெண்கள் மீது எந்த ஈர்ப்புமில்லை என்பவர்கள், பெற்றோர் வற்புறுத்தலுக்காக ஒரு பெண்ணின் தாம்பத்திய உரிமையைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது'' என்று பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.
Comments
Post a Comment