உத்தரப்பிரதேசத்தில் நாய் கடித்த 8 வயது சிறுமியை இரண்டு வாரங்களாக வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்ததால், உடல்நிலை மிகவும் மோசமாகி நேற்று உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, சுமார் 15 நாள்களுக்கு முன்பு பினாஹட்டில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமியை நாய் கடித்திருக்கிறது.
இதையடுத்து, நாய் கடித்தது பற்றி தன்னுடைய தாயிடம் மட்டும் அந்த சிறுமி கூறியிருக்கிறார். பின்னர் நோய்த் தொற்று பரவாமலிருப்பதற்கான ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) போடுவதற்கு மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில், வீட்டிலேயே அந்த சிறுமிக்கு வைத்தியம் பார்க்கப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, இரண்டு வாரங்களுக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரியவந்ததும், சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்விதமாக அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவத்தை முழுமையாக விவரித்த ஆக்ராவிலுள்ள தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, ரேபிஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில், நாய் கடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கினார். அதில், ``ரேபிஸ் தொற்று 100 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. எனவே, நாய் கடித்தால் நீங்கள் அமைதியாக இருக்காமல் உடனடியாக சரியான மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும். எங்களிடம் அதற்கான தடுப்பூசிகள் இருக்கின்றன.
நாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்" என்று டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா கூறினார்.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆக்ராவில் ஒவ்வொரு மாதமும் 5,000 நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இனி சிறுவர்களாக, பெரியவர்களாக இருந்தாலும் நாய் கடித்தால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
Comments
Post a Comment