Doctor Vikatan: மாலை ஆறு மணிக்கு மேல் காபி, டீ சாப்பிடக்கூடாது என்றும், அதனால் இரவு தூக்கம் பாதிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இரவு உணவு சாப்பிட்டதும் காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. சாப்பிடவில்லையென்றால் தூக்கம் வர தாமதமாகிறது. சாப்பிட்டால் உடனே தூங்கிவிடுகிறேன். இது சரியா?
பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்
உலக அளவில் காபி பிரபலமான ஒரு பானம். அதிலுள்ள கஃபைன், தூண்டலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. காலையில் தூங்கி எழுந்ததும் காபி குடிப்பதும், அதன் மூலம் அன்றைய நாள் முழுவதையும் உற்சாகத்துடன் கடப்பதும்தான் பரவலான பழக்கம். ஆனால் சிலர் காலையில் காபி குடித்த பிறகும் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் அதைக் குடிக்கும் வழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும்போது உங்கள் மூளை அலெர்ட்டாக, ஆக்டிவ்வாக இருக்கும்.
இந்த நிலையில் காபி குடிப்பதன் மூலம் உங்கள் தூக்கம் தள்ளிப்போகும். வழக்கமாக நீங்கள் தூங்கும் நேரத்தைக் குறைக்கும். உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.
நன்றாக, நிறைவாகத் தூங்கிய உணர்வே ஏற்படாது. மூளையை பாதித்து தூக்கத்தைத் தூண்டும் அடினோசைன் என்ற ஏற்பிகளைத் தடைசெய்யும். விழித்திருக்கும் நேரத்தில் அடினோசைன் என்ற ரசாயனம் உற்பத்தியாகும். எத்தனை மணி நேரம் விழித்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அடினோசைனின் உற்பத்தி அதிகரித்து, நமக்கு தூக்கத்தை வரவழைக்கும். தூங்க வேண்டிய நேரத்தில் கஃபைன் கலந்த காபி குடிப்பதால் அடினோசைன் உற்பத்தி தடைப்பட்டு, உங்களை நீண்ட நேரம் தூக்கமின்றி விழித்திருக்கச் செய்யும்.
கஃபைனின் தூண்டுதல் திறனானது குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம்வரை நீடிக்கும். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எடுத்துக்கொள்ளும் கஃபைனில் பாதி அளவானது 5 முதல் 7 மணி நேரம் வரை உடலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இரவு தூங்கச் செல்வதற்கு முன், இரவு உணவுடன் அல்லது இரவு உணவுக்குப் பிறகெல்லாம் காபி குடிப்பது நிச்சயம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் கடைசி காபியை நிறுத்திக்கொள்வது நல்லது. மாலை 4 மணிக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது சிறந்தது. அதிக அளவு காபி குடிப்பது சிலருக்கு மனப்பதற்றத்தை ஏற்படுத்தலாம்.
உங்களுக்கு தூக்கத்தில் பிரச்னை, தலைவலி, வாந்தி, படபடப்பு போன்றவை இருந்தால், அவையெல்லாம் அதிக அளவு காபி குடிப்பதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். எனவே தினமும் 2 கப்புக்கு மேல் காபி குடிப்பதைத் தவிருங்கள். ஒருவேளை உங்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு, குடல் தொடர்பான பிரச்னைகள், பருக்கள் போன்றவை இருந்தால் காபியை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. காபிக்கு பதிலாக க்ரீன் டீ, மூலிகை டீ, சாமந்திப்பூ டீ போன்றவற்றைப் பருகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment