Doctor Vikatan: எனக்கு சமீபத்தில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து குணமடைந்தேன். அதன் பிறகு முடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவிட் பாதித்து குணமானபோதும் இதே போல அதிக அளவிலான முடி உதிர்வு இருந்தது. காய்ச்சலுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன தொடர்பு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஒரு நிகழ்வுக்குப் பிறகு முடி உதிர்வு இருப்பது என்பது சாதாரணமானதுதான். அதற்கு 'டெலோஜென் எஃப்ளுவியம்' ( Telogen effluvium ) என்று பெயர். அந்த நிகழ்வு, நீங்கள் குறிப்பிட்டதுபோல டைபாய்டு, கொரோனா, டெங்கு காய்ச்சலாகவோ, சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையாகவோ, பிரசவமாகவோ எப்படியும் இருக்கலாம். அதாவது அந்த மாதிரி தருணங்களில் கூந்தலின் வளர்ச்சிநிலையானது அப்படியே நின்றுவிடும்.
ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்திய அந்தக் காலம் முடிந்ததும் முடிகள் எல்லாம் உதிரத் தொடங்கும். அது நிஜமான முடி உதிர்வு பிரச்னையே அல்ல. தினசரி வாழ்க்கையில் நாம் எல்லோருமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடி உதிர்வை எதிர்கொள்வோம். அதுதான் இயற்கை. ஆனால் ஸ்ட்ரெஸ்ஸான தருணங்களில் அப்படி முடி உதிராது. அந்த நாள்களைக் கடந்தபிறகு அப்போது உதிர்ந்திருக்க வேண்டிய முடிகள் எல்லாம் சேர்ந்து உதிரத் தொடங்கும். அதனால் வழக்கத்தைவிட அதிக முடி உதிர்வு இருப்பதாக உணர்வோம்.
இந்தப் பிரச்னையைத் தான் 'டெலோஜென் எஃப்ளுவியம்' என்கிறோம். இது சிலருக்கு ஆறு மாதங்கள் வரையிலும், சிலருக்கு அதைத் தாண்டியும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு 3 முதல் 6 மாதங்களில் இது நின்றுவிடும். எனவே இது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. முடி உதிர்கிறதே என்பதற்கும் சேர்த்துக் கவலைப்பட்டால் அந்த ஸ்ட்ரெஸ்ஸும் சேர்ந்து முடி உதிர்வை இன்னும் அதிகப்படுத்தும்.
முடி உதிர்வைத் தடுக்க ஆரோக்கியமான, சரிவிகித உணவுப்பழக்கம் முக்கியம். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூந்தலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம்.
வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் இ போன்றவை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் செலினியம் சத்துகளும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியம். எனவே இவையெல்லாம் உள்ளபடி உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment