ஒரு சராசரி இந்தியர் தினமும் 8 கிராம் உப்பை உட்கொள்கிறார், இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 5 கிராம் அளவைவிட மிக அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 18 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் உப்பு உட்கொள்ளல் பற்றிய விழிப்புணர்வு, நடத்தை ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாக கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தினமும் சராசரியாக 7.1 கிராம் அளவு உப்பும், ஆண்கள் தினசரி 8.9 கிராம் உப்பும் எடுத்துக்கொள்வது தெரியவந்துள்ளது.
ஒருவர் தன் உணவில் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்வதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், அகால மரணம், இரைப்பை புற்றுநோய் ஆகியவை பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறபடுகிறது. ஆய்வின்படி பரிந்துரைக்கப்பட்ட 5 கிராம் உப்பு எடுத்துக்கொள்வதைக் குறைப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையை 25% வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் அதிக உப்பு எடுத்துக்கொள்வதன் விளைவுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட பொது மருத்துவர் அருணாசலம்,
“ சோடியம் குளோரைடு என்ற உப்பு உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் மிகவும் தேவையானது. சோடியம் அதிகமாக எடுக்கும்போது உடல் தண்ணீரை அதிகமாகச் சேர்த்துவைத்துக்கொள்ளும். இதனால் உடலில் அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படும். உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் அதிகமானால் அதைத்தொடர்ந்து ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் ஆகியவையும் வரலாம்.
அதேபோல் சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள். மூளைக்கு சோடியம் தேவை... அது கிடைக்கவில்லை என்றால் உடல் செயலிழந்துவிடும். மேலும் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் குறையும், தசைகள் பலவீனமாகும். அதனால் நம் உணவில் சோடியம் குறையவும் கூடாது, அதிகமாகவும் கூடாது. ஐந்து கிராம் உப்புதான் நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் 8 கிராம் வரை எடுத்துக்கொள்வதால் நிச்சயம் உடல்நலம் பாதிக்கப்படும்.
நாம் வெளியில் வாங்கிச் சாப்பிடும் சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து பொருள்களிலும் உப்பு இருக்கும். குறிப்பாக ஹோட்டல்களில் விற்கப்படும் நான்வெஜ் உணவுகளில் காரம், மசாலா, உப்பு என அனைத்துமே வீட்டுஉணவை விட அதிகமாகவே இருக்கும். நம் அன்றாட வாழ்வில் உப்பு அதிகமானதற்கு, வெளியில் உணவு சாப்பிடும் பழக்கம் அதிகரித்ததும் மிக முக்கிய காரணம். இதனால் தான் இளம் வயதினர் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிக உப்பு எடுத்துக்கொள்வதால் உடலில் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.
ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தாலே அவர் நிச்சயமாக தங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும், மேலும் வெளியில் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும், முக்கியமாக ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உணவுப்பொருள்களில் சோடியம் அதிகமாக இருந்தால் எந்த நுண்ணுயிரிகளும் அதை தாக்காது என்பதால் உணவு பதப்படுத்தலுக்கு உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது போக சாலையோரங்களில் கிடைக்கும் மாங்காய், வெள்ளரிக்காய், கொய்யாக்காய் ஆகியவற்றிலும் மிக சாதாரணமாக நாம் உப்பு சேர்த்தே சாப்பிடுகிறோம் அவற்றையெல்லாம் தவிர்க்கலாம். நம் உணவில் எதில் எல்லாம் தேவையில்லாமல் உப்பு சேர்க்கிறோமோ அதையெல்லாம் குறைத்தால் நல்லது” என்கிறார்.
Comments
Post a Comment