"உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள், இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடியே, தேனியில் உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலுவுக்கு முதன் முறையாக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்று, இந்தியாவையே நெகிழ்ச்சியோடு கவனிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து, தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியாக இருந்த ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகனிடம் நாம் பேசியபோது, நெகிழ்ச்சியோடு பேசினார்...
"என் மகன் ஹிதேந்திரன் நினைவு தினத்தை உடல் உறுப்புதான தினமாக அறிவிக்கவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தோம். அதன்படி, செப்டம்பர் 23-ம் தேதியை உறுப்புதான தினமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. கடந்த 2009-ம் ஆண்டு என் மனைவிக்கு 'கல்பனா சாவ்லா' விருதும் வழங்கி கெளரவித்தது. மகனை இழந்த துக்கத்தில், அந்த விருது தேவையா என்று யோசித்தாலும் விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காகப் பெற்றுக்கொண்டோம்.
அதன்பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்ததோடு விழிப்புணர்வும் ஏற்பட்டது. எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் எல்லா குடும்பத்திற்கும் கிடைக்கவேண்டும் என்று நாங்கள் விருப்பப்பட்டோம். அரசும் வருடந்தோறும் உடல் உறுப்பு தானம் செய்வோரின் குடும்பத்தினருக்கு ஒரு விழா ஏற்படுத்தி சான்றிதழ் அளித்துப் பாராட்டிக்கொண்டிருந்தது.
அதேநேரம், உறுப்பு தானம் செய்யும் செய்திகள் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும். இப்போது, பெரிதாக வருவதில்லை. வந்தாலும் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது தெரியாது. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ள தலைவர்கள், ராணுவ வீரர்கள், மக்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இப்போது, அவர்கள் வரிசையில் உடல் உறுப்பு தானம் செய்வோரையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
உறுப்பு தானம் செய்வோரும் சமூகத்திற்கான பங்களிப்பை அளிப்பவர்கள்தான். இப்போது, அரசு மரியாதை கொடுப்பதால், எல்லோரும் கவனிப்பார்கள். விழிப்புணர்வும் அதிகமாகும். இறந்தவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கெளரவம் கிடைக்கும்.
சமூதாயத்திற்கும் உறுப்புதானம் குறித்த சிந்தனை வரும். அதேநேரத்தில், அரசு மரியாதை என்ற அங்கீகாரத்துடன் உறுப்புதானம் செய்வோரின் குடும்பத்திற்குப் பணம் எல்லாம் கொடுக்கக்கூடாது. அப்படி எதிர்காலத்தில் அறிவிக்கவும் கூடாது. ஏனென்றால், இது ஒரு தானம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குவது. இதனை பணம் கொடுத்து அங்கீகாரம் செய்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் கட்டாய மூளைச்சாவும் நிகழலாம். அதனால், பண மரியாதை எல்லாம் வேண்டாம்.
அதேநேரம், உறுப்புதானம் செய்வோரின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுப்பது போலவே, அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் சிறந்த மருத்துவர்களுக்கும் அரசு ஊக்கத்தொகை அறிவிக்கவேண்டும். அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள்" என்கிறார் கோரிக்கையாக.
Comments
Post a Comment