கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் கேரளாவில் நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என சாம்பிள் பரிசோதனையில் தெரியவந்தது.
மேலும் நிபா பாதித்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவில் நிபா பாதித்தவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறி உள்ளது. வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில் வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும் இறந்தால் உடனே ரிப்போர்ட் செய்ய கோழிக்கோட்டில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்ற 4 பேரின் சாம்பிள்களும் 5 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டன. இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மூன்று வகையான சாம்பிள்களை ஆய்வுக்கு அனுப்பியதில் அனைத்திலும் நெகட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து நான்குபேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களின் வீடுகளில் சுகாதாரம் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மேலும் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை ஏற்படுத்தப்படுள்ளது.
நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 568 பேர் இப்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர். சுகாதாரத்துறை அறிவித்துள்ள வழிமுறைப்படி அக்டோபர் 5-ம் தேதி வரை இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையின் நிபா கட்டுப்பாட்டு அறை அக்டோபர் 26-ம் தேதி வரை செயல்படும். நிபா வைரஸ் கண்டறியப்பட்டபிறகு ஒரு மரணம்கூட ஏற்படாமல் தடுக்க முடிந்தது. இனியும் நிபா வைரஸ் அச்சுறுத்தாமல் இருக்க கால்நடைத்துறை, வனத்துறை, விவசாயத்துறை ஆகியவை இணைந்து கம்யூனிட்டி சர்வேலென்ஸ் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட கலெக்டர் தலைமையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை இந்த கமிட்டி கூட்டம் நடைபெறும். வீட்டில் வளர்க்கும் பிராணிகளான பூனைகள் போன்றவை ஒன்றுக்கும் அதிகமானவை இறந்துபோனாலோ, காட்டு மிருகங்கள் வழக்கத்துகு மாறாக இறந்துபோனாலோ உடனே கண்டுபிடித்து அந்த புள்ளி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் நிபா பரவாமல் இருக்க இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்" என்றார்.
Comments
Post a Comment