மதுரை: ``முதியோருக்கு சிகிச்சையை வீட்டுக்கே போய் வழங்குகிறேன்" - `டாக்டர் ஆன் வீல்ஸ்’ சுவாமிநாதன்..!
"60, 70 வயதை கடந்தவர்களுக்கு அன்பும், அதரவுபோல மருத்துவ சிகிச்சையும் நிச்சயம் தேவை. வசதி இருந்தாலும், உடன் யாரும் இல்லாததால் அவசரத்துக்கு அவர்களால ஒரு ஆட்டோ பிடித்து கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை. உறவினர்கள் உடன் இருந்தாலும் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத வகையிலும், ஆட்டோ, காரில் ஏறிச்செல்ல முடியாத நிலையிலும் பலர் படுக்கையிலேயே இருக்கிறாங்க. அவங்கதான் இப்போ எங்களை அழைக்கிறாங்க. அவங்க வீடு தேடிச்சென்று சிகிச்சை அளிக்கத்தான் 'டாக்டர் ஆன் வீல்ஸ்' என்ற சேவையைத் தொடங்கினேன்" என்கிறார் டாக்டர் சுவாமிநாதன்.
ஆம்.... உடல் நலமில்லாத முதியோர்கள் போன் செய்தால் அவர்களது வீடுகளுக்கே சென்று குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதை கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார் டாக்டர் சுவாமிநாதன்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில், அவரது செல்வி கிளினிக்கிற்கு சென்றோம். நம்மிடம் பேசிய டாக்டர் சுவாமிநாதன், "பூர்விகம் திருச்சி. அம்மா கனடாவுல வேலை பார்த்ததால ஸ்கூல் ஃபைனல் வரை அங்கேதான் படித்தேன். சின்ன வயசுலயிருந்து மெடிசின் படிக்கணும் என்பது ஆசை. தமிழ்நாட்டுக்கு வந்து எம்.பி.பி.எஸ்-முடிச்சுட்டு, தொடர்ந்து எமர்ஜென்சி மெடிசினில் எம்.டி-யும் முடிசுட்டு மதுரையில ஒரு தனியார் ஹாஸ்பிட்டல்ல 5 வருஷம் பணியாற்றினேன். அங்கயிருந்த கார்ப்பரேட் செட்டப் பிடிக்கலை.
குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கணும் என்ற எண்ணம் இருந்தது. அதை, என்னை வழிநடத்தும், என் மனைவியின் தந்தை சந்திரசேகரிடம் தெரிவிச்சேன். அவரும் அதே சிந்தனையுடையவர் என்பதால மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சேவையாற்ற எஸ்.எஸ்.காலனியில சிறிய கிளினிக் நடத்த ஏற்பாடு செஞ்சார். அப்படியே, மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள முதியவர்கள் போன் செய்தால் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிச்சா அவங்களுக்குப் பலனுள்ளதா இருக்கும்னு அவர் சொன்ன யோசனை எனக்குப் பிடிச்சுருந்தது. அப்படி ஆரம்பிச்சதுதான் 'டாக்டர் ஆன் வீல்ஸ்' சர்வீஸ்.
இன்றைய காலச் சூழல்ல பலர் வேலைநிமித்தமாவும், மற்ற காரணங்களுக்காகவும் வெளிநாடுகள், வெளியூர்களில் இருக்க, தனியா வசிக்கும் அவங்க பெற்றோர் பராமரிப்புக்குக் கஷ்டப்படுறாங்க. என்னதான் பிள்ளைகள் பணத்தை அனுப்பினாலும் அருகிலிருந்து கவனிக்கும் அரவணைப்பு அவங்களுக்குக் கிடைக்கிறதில்ல. இது ஒருபக்கமென்றால், குடும்பத்தினருடன் முதியோர் வசிச்சாலும் நோய்வாய்ப்படும்போது அவங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல் பல வீடுகள்ல இருக்கு.
இன்றைய காலகட்டத்தில் ஆர்டர் செய்தால் எல்லா பொருள்களும் வீட்டுக்கே வரும் நிலையில், ஏன் குவாலிட்டியான ஹெல்த் கேரை மட்டும் நியாயமான கட்டணத்தில் வீட்டுக்கே சென்று கொடுக்க முடியாதுனு யோசித்துதான் இந்த முயற்சியை எடுத்தோம்.
முதியோருக்கு கன்சல்டிங் மட்டும் அல்ல, தொடர் ட்ரீட்மென்டும் கொடுக்க முடிவு செய்து 2019-ல் 'டாக்டர் ஆன் வீல்ஸ்'-ஐ ஸ்டார்ட் பண்ணினோம். அடுத்த ஆண்டே கோவிட் பேரிடர் வந்துடுச்சு. அந்தக் காலகட்டத்தில் பல மருத்துவமனைகளும் இயங்காத நிலையில், நாங்க விடாமல் செயல்பட்டோம். முதியோர் சிகிச்சையோடு 700 கோவிட் கேஸ்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளித்தோம்.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவைக்கும் சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கும், முதியோரை பரிசோதித்து முடிவுகளின் அடிப்படையில சிகிச்சை அளிக்கிறோம்.
ஆரம்பத்தில் என்னோட மாருதி வேன் மூலம்தான் பேஷன்ட்களின் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தோம். என் மாமனார், மருந்துப் பையை தூக்கிக்கொண்டு என்கூட வருவார். பின் ஊழியர்கள் சேர்க்கப்பட்டு, இப்போ 8 பேர் என்னோடு சேர்ந்து இந்த மருத்துவ சேவையை செய்றாங்க.
ஒரு ஹாஸ்பிட்டல் வார்டுல எப்படி பேஷன்ட்ஸை அட்டண்ட் பண்ணுவாங்களோ, அப்படித்தான் நாங்களும் வீடுகள்ல பேஷன்ட்ஸை அட்டண்ட் பண்றோம். முதலுதவி சிகிச்சை, ரத்த அழுத்தம், சர்க்கரை குறைபாடு சோதனைகள், மற்றும் அறுவை சிகிச்சை, கீமோ தெரபி சிகிச்சைகளுக்குப் பிறகான கண்காணிப்புகளை செய்றோம். இதயம், சிறுநீரகம், மூளை, கல்லீரல் போன்ற அதி தீவிர சிகிச்சைக்கு அந்தந்த வசதிகள் கொண்ட மருத்துவமனைகளுக்குச் செல்லப் பரிந்துரைக்கிறோம்.
நாங்க வழங்கும் இந்த `டாக்டர் ஆன் வீல்ஸ்' சிகிச்சையை அனுபவபூர்வமா அறிந்த நல் உள்ளம் கொண்ட மனிதர் ஒருவர், அன்பளிப்பாக கொடுத்த இந்த வாகனத்தில் தேவையான மருத்துவக் கருவிகள், மருந்துகள் எப்போதும் தயாரா இருக்கும். தினமும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து தயாராகிடுவேன். அதேபோல் எங்க டிரைவர், மருத்துவ உதவியாளரும் தயாராகிடுவாங்க. நாங்கள் பகிர்ந்துள்ள போன் நம்பருக்கு வந்திருக்கிற அழைப்புகளை கன்ஃபார்ம் செய்துட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று சிகிச்சை அளிப்போம்.
மதுரைக்குள்ள மட்டுமில்லாம, பக்கத்துல திருமங்கலம், நத்தம்னு 60 கி.மீட்டர் தொலைவிலுள்ள ஊர்களுக்கும் சிகிச்சை அளிக்கப் போறோம். காலை 9 மணிக்குத் திரும்பி வந்து, எஸ்.எஸ்.காலனியிலுள்ள எங்க கிளினிக்கில் 12 மணி வரை ஓ.பி பார்ப்போம். மதியம் 1 முதல் 3 மணிவரை என் பெர்சனல் வேலைகளுக்கு ஒதுக்கிவிடுவேன். மீண்டும் மதியம் 3 மணியிலிருந்து, வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிப்போம். மாலை 6.30 மணியிலிருந்து 8.30 வரை ஓ.பி பார்த்துட்டு, அழைத்துள்ள வீடுகளுக்கு மீண்டும் சென்று சிகிச்சை அளிச்சிட்டு, இரவு 11 மணிக்கு வீட்டுக்கு உறங்கச் செல்வோம். இப்படித்தான் மூன்றரை வருஷமா இயங்கிட்டு வர்றேன். இந்த சர்வீஸ் தொய்வில்லாமல் நடப்பதற்கு எங்களோட 8 ஊழியர்களும் முக்கியக் காரணம். கால் பண்ணுகிற நோயாளிகளை ஒருநாள் கூட பார்க்காமல் விட்டதில்லை.
நான் தனிப்பட்ட விஷயங்களுக்காக வெளியூர் செல்வது ரொம்ப அரிது. உள்ளூர் நிகழ்வுகளுக்குப் போனாலும் உடனே வந்துவிடுவேன். இந்த பணிகளை நான் முழு ஈடுபாட்டோடு செய்றதுக்கு என் மனைவி கோமதி முக்கியக் காரணம். முதுகெலும்பு மாதிரி அவர்தான் கிளினிக்கை நிர்வாகம் செய்றார். வருகின்ற போன் அழைப்புகளை ஒருங்கிணைக்கிறார். அதுபோல், என் மாமனாரும் எங்ககூட சேர்ந்து உழைக்கிறார். அவர் எனக்கு அப்பா மாதிரி.
'ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்துக்கணும்? கம்மியான கட்டணத்தில் ஏன் வைத்தியம் பார்க்கணும்? இருந்த இடத்திலிருந்து வைத்தியம் பார்க்க முடியாதா? சம்பாதித்து செட்டிலாகிற எண்ணம் இல்லையா?'னு உறவினர்களும், டாக்டர் நண்பர்களும் கேட்பாங்க. 'எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. விரும்பினா நீங்க என்னோடு சேர்ந்துக்கோங்க’னு சொல்வேன். அதோடு ஆஃப் ஆகிடுவாங்க.
நாங்க ஆரம்பத்தில் சிகிச்சை அளித்த பேஷன்ட்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்ல, அவங்க அடுத்தவர்களிடம் சொல்ல... இப்படியே எங்கள் வட்டம் பெரிதாகிடுச்சு. இதுவரை 25,000 பேருக்கு சிகிச்சை அளிச்சிருக்கேன். அதில் வசதியானவர்களும் உண்டு, ஏழைகளும் உண்டு. எங்களுக்கு எல்லோரும் ஒன்றுதான்.
நோயாளிகள் ஆயிரம் கவலைகளோடு வருவாங்க. அவங்களுக்கு சிகிச்சை செய்றது மட்டும் மருத்துவரின் வேலை இல்ல. அவங்க பிரச்னைகளை காதுகொடுத்துக் கேட்டாலே ஓரளவு குணமாகிடுவாங்க. அதை நான் செய்றேன்.
எங்களுடன் இணைந்து பணியாற்ற, எங்களைப் போன்ற சிந்தனை கொண்ட டாக்டர்களும், ஊழியர்களும் வந்தால் மகிழ்வோம். அதன் மூலம் இன்னும் பலருக்கு சேவை செய்ய முடியும். அவ்வப்போது எனக்குத் தெரிந்த டாக்டர்களை வெச்சு, இப்பகுதியில் பெரிய அளவில் கட்டணமில்லாத மருத்துவ முகாம்களை நடத்தி அனைவருக்கும் மெடிக்கல் செக்கப் செய்றோம். இலவச சோதனைகள், மருந்துகளையும் கொடுக்கிறோம்.
எதிர்காலத்தில்... முதியவர்களுக்கு அனைத்து வகையான மருத்துவ வசதிகளுடன், நல்ல உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஹோம் ஒன்றை தொடங்கணும். முதியவர்களை தற்காலிகமாவும், நிரந்தரமாவும் பராமரிக்கும் வகையில் விடுதி அமைக்கணும். இதுதான் எங்க கனவுத் திட்டம்’’ - ஒவ்வொரு வார்த்தையையும் மனதிலிருந்து பேசிய டாக்டர் சுவாமிநாதன், தன் ஊழியர்களை நம்மிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
செயல் விரியவும், சிறக்கவும் வாழ்த்துகள்!
Comments
Post a Comment