இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் எளிதில் புற்றுநோய்க்கான சிகிச்சையை அணுக முடியாத சூழலில் உள்ளனர். அதனால் நோய் பாதிப்பு அதிகமாகி விரைவில் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இப்படியான பெண்களின் நிலை குறித்து லான்செட் கமிஷன் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. ‘பெண்கள், சக்தி மற்றும் புற்றுநோய்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை பெண்கள் ஆரோக்கியத்தின் மீதான சமூக அக்கறையின்மை, அறிவு இல்லாமை, விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பெண்களை பாதிக்கும் புற்றுநோயைத் தடுப்பது, கண்டறிவது மற்றும் கவனிப்பு ஆகியவை எவ்வாறு தாமதப்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
லான்செட் ஆய்வு முடிவின் படி இந்திய பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தடுக்கக் கூடியவை, மற்றும் 37% அவர்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அணுகினால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண்களில் சுமார் 6.9 மில்லியன் புற்றுநோய் இறப்புகள் தடுக்கக்கூடியவை, மற்றும் 4.03 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை அளிக்கக்கூடியர்கள் என்று லான்செட் கமிஷனர் டாக்டர் இஷு கட்டாரியா கூறியுள்ளார்.
2020-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கியக் காரணமாக இருந்தது மார்பகம், கர்ப்பப்பை வாய், கருப்பை புற்றுநோய்களே என்று அதிகாரபூர்வ தரவு காட்டுகிறது. மேலும் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் நோய்த்தொற்றுகளில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் HPV வைரஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று ஆகியவை அடங்கும். புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய ஆபத்து காரணியாக புகையிலை உள்ளது. இது புற்றுநோய் இறப்புகளில் 6%-க்கு பங்களிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் ஆகியவை இந்தியாவில் புற்றுநோய் இறப்பு விகிதத்தில் 1%க்கு பங்கு வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களது குடும்பப் பொறுப்புகளால் தங்கள் உடல் நிலை பிரச்னைகளை உரிய கவனம் கொடுக்காத பல காரணங்களால் முன்கூட்டியே சிகிச்சை பெறத் தவறுகிறார்கள். `கல்வி மற்றும் நிதி ரீதியாகக் குறைந்த அதிகாரம் பெற்ற பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்’ என்கிறார் மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி.
Comments
Post a Comment