திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சிவராஜ்பேட்டை புதிய காலனிப் பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிகண்டன் - சுமித்ரா. இவர்களுக்கு 15 வயதில் பிரித்திகா, 13 வயதில் தாரணி, 7 வயதில் யோகலட்சுமி, 5 வயதில் அபிநிதி என நான்கு பெண் குழந்தைகளும், 8 மாத ஆண் கைக்குழந்தையும் இருக்கின்றனர். சமீபத்தில், மணிகண்டன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவன் இறந்த துயரத்திலும், 5 குழந்தைகளை படாதபாடுபட்டு வளர்ந்து வந்தார் சுமித்ரா.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 23-ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், யோகலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, அவள் மட்டும் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறாள்.
இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். குழந்தை புருஷோத்தமனுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே பகுதியில் வசிக்கும் மேலும் சிலருக்கும் தீவிர காய்ச்சல் அறிகுறி இருப்பதால், அவர்களும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி சிவராஜ்பேட்டை புதிய காலனிப் பகுதி மக்கள், ‘‘நகராட்சி நிர்வாகம், எங்கள் தெருவைக் கண்டுகொள்வதே கிடையாது. கழிவுநீர் அப்படியே தெருவில் தேங்கியிருக்கிறது. மழைக்காலம் என்பதால், வீட்டுக்குள்ளும் கழிவுநீர் புகுந்துவிடுகிறது. குப்பைகளையும் அகற்றுவது கிடையாது. இப்போது ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டு, அதில் ஒரு குழந்தை இறந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல, எங்கள் தெருவை அடிக்கடி வந்து சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையெனில், போராட்டத்தைக் கையிலெடுப்போம்’’ என்றனர் வேதனையோடு.
தீவிர காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் உயிரிழந்திருக்கும் இந்த துயரச் சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Comments
Post a Comment