Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இதுவரை 3 முறை கருத்தரித்து, மூன்று முறையும் அபார்ஷன் ஆகிவிட்டது. இதற்கு என்ன காரணம்... தீர்வு என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
ஒருபுறம் அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்னை... மற்றொரு புறம், எளிதில் கருத்தரிக்கும் பெண்கள், ஆனால் அந்தக் கரு கலைந்துவிடுகிற பிரச்னையை சந்திப்பவர்கள் என இருவேறு எதிர் எதிர் நிலைகளைப் பார்க்கிறோம்.
தொடர் அபார்ஷனுக்கான காரணங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி தொடர் அபார்ஷனை எதிர்கொள்ளும் பெண்களுக்கு கரு தங்கி வளர்வதில் மரபியல் ரீதியாக ஏதேனும் பிரச்னை இருக்கலாம். நெருங்கிய உறவில் திருமணம் செய்வோருக்கு இந்தப் பிரச்னை அதிகம் வரலாம். இப்படித் திருமணம் செய்யும் பெண்களுக்கு கருத்தரிக்கும்.
ஆனாலும் அது வளர்வதில் சிக்கல் இருக்கும். மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யும்போது கருவின் இதயத்துடிப்பு இருக்காது. இதை மருத்துவ மொழியில் 'மிஸ்டு அபார்ஷன்' என்கிறோம். அதாவது சரியான வளர்ச்சி இல்லாத கருவை, இயற்கையே மறுப்பதாக அர்த்தம்.
இதைத் தாண்டி வேறு சில காரணங்களாலும் சிலருக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்படலாம். சம்பந்தப்பட்ட பெண்ணின் நோய் எதிர்ப்புத் திறனில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம். கர்ப்பப்பையில் பாலிப் எனப்படும் சதை வளர்ச்சியோ, இன்ஃபெக்ஷனோ இருந்தாலும் இப்படி ஏற்படலாம். எனவே உங்கள் விஷயத்தில் எந்தக் காரணத்தால் இப்படி நிகழ்கிறது என்பதை மருத்துவருடன் கலந்தாலோசித்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment