Doctor Vikatan: நான் ஒரு வருட காலமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளைப் பின்பற்றி வருகிறேன். ஆனால் எடைக்குறைப்பு என்பது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. என்ன பிரச்னையாக இருக்கும்... இதற்குத் தீர்வு என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.
இந்தக் கேள்வி பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறேன். முதல் வேலையாக, நீங்கள் சில விஷயங்களை செக்லிஸ்ட் போல வைத்துக்கொண்டு சரிபாருங்கள்.
ஆரோக்கியமான உணவு என்ற எண்ணத்தில் அவற்றை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வது... உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கொய்யாப்பழம் சாப்பிடுவது, ஏகப்பட்ட பழங்கள் சாப்பிடுவதெல்லாம் கலோரி எண்ணிக்கையைக் கூட்டும். அதே மாதிரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது... இவற்றில் கொழுப்பும் அதிகம், புரதச்சத்தும் அதிகம்.
புரோட்டீன் ஷேக், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடிப்பது... அவற்றில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். பல உணவுகளில் ஃப்ரக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் போன்ற மறைமுக சர்க்கரை அதிகமிருக்கும். எனவே உணவுப்பொருள்களை வாங்கும்போது அவற்றின் லேபிளை பார்த்து வாங்கினால் நம்மை அறியாமல் அளவுக்கதிக சர்க்கரை சேராமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஆரோக்கியமான உணவு என்றாலும் அளவு முக்கியம். எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொன்றையும் டைரியில் குறிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் எதையாவது சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதைத் தவிர்க்கவும். அந்த அட்வைஸ் எல்லோருக்குமானது அல்ல.
இவற்றை கவனித்து வந்தாலே எங்கே தவறு நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்து திருத்திக்கொள்ள முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment