Doctor Vikatan: என்னுடைய பிள்ளைகள் இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு சாஸ் இருந்தால்தான் சாப்பிடுகிறார்கள். தக்காளி சாஸ், கெட்ச்சப்,கொடுப்பது சரியானதா...? சோயா சாஸ் சேர்த்த சமையல் ஆரோக்கியமானதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
இதுபோன்ற சாஸ் வகைகளில் சோடியம் அளவு மிக அதிகம். குறிப்பாக சோயா சாஸில் 100 கிராமுக்கு ஐயாயிரம் மில்லிகிராமுக்கு அதிகமான சோடியம் இருக்கும். உலக சுகாதார நிறுவனம் நமக்கு ஒருநாளைக்கு 2300 மில்லிகிராம் அல்லது 5 கிராம் சோடியம் போதுமானது என பரிந்துரைக்கிறது. அப்படியென்றால் இந்த சாஸ்களின் மூலம் நம் உடலில் சேரும் சோடியத்தின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள்.
இந்த சாஸ் வகைகளில் சோடியம் மட்டுமன்றி, நிறமிகள், ப்ரிசர்வேட்டிவ் போன்றவையும் அதிகம் சேர்க்கப்படுகின்றன. பச்சைமிளகாயை அரைத்து அப்படியே வைத்துப் பாருங்கள்..... ஒன்றிரண்டு நாள்களில் அதன் நிறம் மாறிவிடும்.... பூசணம் பிடிக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் சாஸ்கள் நீண்டகாலத்துக்கு கெட்டுப்போகாமலிருக்க ஏகப்பட்ட கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பிரெட் என எல்லாவற்றுடனும் சாஸ் கொடுப்பது குறித்து எத்தனையோ விளம்பரங்கள் வருகின்றன. அவற்றைப் பார்த்து அப்படியே சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அளவுக்கதிக உப்பு, நிறமி என தேவையற்ற ரசாயனங்கள் உடலில் சேர்கின்றன. ஒரு கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளும் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன. பிறகு குழந்தைகளின் உணவுப்பழக்கத்தைக் குறைசொல்வது எந்த வகையில் நியாயம? பெற்றோர் பழக்காமல் பிள்ளைகளுக்கு இவற்றின் சுவை பழகுவதில்லையே.
வாரத்துக்கு ஒன்றிரண்டு நாள்கள்தான் சாப்பிடுகிறார்கள் என்றாலும் இதுபோன்ற சாஸ் வகைகளில் உள்ள அதிகப்படியான சோடியம், நிறமி மற்றும் ப்ரிசர்வேட்டிவ்ஸ் போன்றவை அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானவைதான். சாஸ் வகைகளிலேயே சோயா சாஸில்தான் அதிகப்பட்ட சோடியம் இருக்கிறது. அதை ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல உணவுகளில் சேர்க்கிறார்கள். கடைகளில் கிடைக்கும் அதே சுவை வேண்டும் என்பதற்காக வீட்டிலும் பலரும் இந்த வகை சாஸ் சேர்த்துச் சமைக்கிறார்கள். இது மிகவும் தவறு.
சோடியம் குறைவான 'லோ சோடியம்' சாஸ் வகைகள் கிடைக்கின்றன. அவையுமே ஆரோக்கியத்துக்கு ஏற்றவையல்ல. மூன்று மாதங்களுக்கொரு முறை இவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை. அடிக்கடி சாப்பிடுவது ஆபத்தானது.
இளவயது உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, செரிமானமின்மை, குடல் பாதிப்புகள் என பல ஆபத்துகளை இதன் மூலம் நீங்களாகவே தேடிக் கொள்கிறீர்கள்.
எனவே இதுபோன்ற சுவைகளுக்கு குழந்தைகளைப் பழக்கமாமல் நம் பாரம்பர்ய உணவுகளைக் கொடுத்து ஆரோக்கியத்தை உறுதிசெய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment