ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த பெண்ணின் மூளையில் உயிருடன் ஒட்டுண்ணி புழு ஒன்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவில் வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பல அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2022-ம் ஆண்டில் இவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஐ.ஆர் ஸ்கேனில், மூளையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ நிபுணர்கள் திட்டமிட்டனர். அறுவை சிகிச்சையில், சிவப்பு நிறத்தில் 8 சென்டி மீட்டர் நீளமுள்ள புழுவை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். இந்தப் புழு அறிவியல்ரீதியாக `ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி' (Ophidascaris robertsi) என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட இந்த வகை புழுவானது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா போன்ற பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மலைப்பாம்புகளுடன் தொடர்புடையது. மனிதனில் பாம்பு ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கு பாம்புகளுடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், பாம்புகள் நிறைந்த ஏரிக்கு அருகில்தான் அவர் வசித்து வந்திருக்கிறார். எனவே, சமைப்பதற்காகச் சேகரிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டு கீரை போன்ற உண்ணக்கூடிய புற்கள் மூலம் புழுவின் முட்டைகள் கவனக்குறைவாக உட்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
``அதிகரித்து வரும் நோய்களில் சுமார் 75 சதவிகிதம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன. இவற்றில் கொரோனா போன்ற மோசமான எடுத்துக்காட்டுகள் அடங்கும். அதிர்ஷ்டவசமாக, கோவிட், எபோலா போலல்லாமல், குறிப்பிட்ட இந்தத் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தாது; ஏனெனில் இது மக்களிடையே பரவாது.
இருப்பினும், உலகின் பல்வேறு பகுதிகளில் பாம்புகள் மற்றும் ஒட்டுண்ணிகள் பரவுவதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற நோய் பாதிப்புகள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நோய் சூழல் அரிதான போதும், நோயாளியின் நிலை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அவரது உடல்நிலை மேம்பட்டது'' என கன்பராவில் உள்ள தொற்றுநோய் மருத்துவர் சஞ்சய சேனநாயக கூறியுள்ளார்.
Comments
Post a Comment