பெங்களூருவில் இருந்து டெல்லிக்குச் சென்ற விஸ்தாரா விமானத்தில் (Vistara Flight) பயணித்த 2 வயது குழந்தை திடீரென மூச்சு விடுவதை நிறுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதே விமானத்தில் பயணித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழந்தைக்கு வேண்டிய முதலுதவிகளை அளித்துக் காப்பாற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி செய்து தன்னுடைய அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அதில், ’எங்கள் இந்தியன் சொசைட்டி ஃபார் வாஸ்குலர் அண்ட் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி டாக்டர்கள் குழு, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, விமானத்தில் அவசர மருத்துவ தேவை ஏற்பட்டுள்ளது.
2 வயது பெண் குழந்தைக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுற்று போயுள்ளது. இந்தக் குழந்தைக்கு intracardiac repair என்ற இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.
குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், நாடித்துடிப்பும் மூச்சும் நின்று போயுள்ளதை அறிந்தனர். கைகளும், கால்களும் மிகவும் குளிர்ச்சியாக இருந்துள்ளன. உதடுகள் மற்றும் விரல்கள் நிறம் மாறி இருந்துள்ளன.
குழந்தையின் மூச்சுப் பாதையைச் சரிசெய்து, மருத்துவக் குழு மருந்துகளைச் செலுத்தி உள்ளனர். குழந்தையின் ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. மருத்துவ அவசர நிலை காரணமாக விமானம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டது. நாக்பூரை அடைந்ததும் மருத்துவரிடம், அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது'' எனப் பதிவிட்டுள்ளது.
நாக்பூரில் குழந்தையை மருத்துவரிடம் சேர்க்கும் வரை காத்துவந்த மருத்துவக்குழுவிற்கு அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment