புற்றுநோய் என்ற வார்த்தை தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல், வயதானவர்கள் வரை யாருக்கு, எப்போது இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்றே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. என்னதான் புற்றுநோய் சாதாரணமானதாக மாறினாலும் அதற்கான சிகிச்சை இன்னும் கடினமாகவே உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலகட்டங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய்க்கு எளிய சிகிச்சை அளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அவர்களின் முயற்சியின் பலனாக, உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) என்ற பொதுச் சுகாதார அமைப்பு, புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய ஊசியைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த ஊசியை நோயாளிக்குச் செலுத்தினால், அடுத்த 7 நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கிவிடும் என அந்நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது.
அவர்கள் இந்த ஊசியை அங்கீகரித்துவிட்டால், இது முதலில் இங்கிலாந்து முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்த ஊசியால் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்றும் கூறுகின்றனர்.
தற்போது புற்றுநோய்க்கு அடிஸோலிஸுமாப் (Atezolizumab) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது நோயாளிகளுக்கு குளுக்கோஸ் போன்று நரம்பு மூலம் செலுத்தப்படுகிறது. இது செயல்பட 30 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும். இதனுடன் ஒப்பிடும்போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசி, 7 நிமிடங்களிலேயே செயல்படத் தொடங்கிவிடும்.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 3,600 பேருக்கு அடிஸோலிஸுமாப் மருந்து அளிக்கப்படுகிறது. தற்போது புற்றுநோய் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதால், இன்னும் பலருக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும், அதுமட்டுமன்றி கீமோதெரபி சிகிச்சைக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு உலக மருத்துவத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment