Skip to main content

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை... கலக்கம் வேண்டாம்

மனித உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு கல்லீரல். செரிமானத்தில் ஆரம்பித்து, ரத்த உறைவை முறைப்படுத்துவது, தொற்றுகளைத் தடுப்பது என இதற்கு பல வேலைகள். கல்லீரல் தீவிர பாதிப்புக்குள்ளாகும்போது, அதனை அகற்றிவிட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதுதான் தீர்வாக இருக்கிறது.

இந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறைகள், அதில் உள்ள நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து சென்னை காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுவாமிநாதனிடம் உரையாடினோம்...

கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுவாமிநாதன் | காவேரி மருத்துவமனை, சென்னை.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றாலே ஒருவித பயம் வருகிறதே... கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா? இதற்கு வேறு மாற்று வழி ஏதேனும் உள்ளதா?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், சிரோசிஸ் பாதிப்புக்குள்ளான கல்லீரலை அகற்றி, மாற்று கல்லீரல் பொருத்துவர். இது 6- 8 மணிநேரம் வரை நடைபெறும் மிகப்பெரிய அறுவை சிகிச்சை. ஆனாலும் தற்போது இந்தியாவில் இதன் வெற்றி விழுக்காடு 95- 98 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 100 பேருக்குச் செய்யப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், 95-98 பேர் குணமடைந்து சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள். பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுவும் 95 சதவிகிதத்திற்கு மேல் வெற்றிகரமாக உள்ளது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், பகுதி கல்லீரலை வழங்கும் டோனர் குறித்து விளக்க முடியுமா?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதலிரண்டு மாதங்கள்தான் சற்று கடினமானதாக இருக்கும். அதன் பின்னர் பல வருடங்களுக்கு எந்தப் பிரச்னையும் இன்றி வாழ்க்கை சாதாரணமானதாக அமையும். லிவிங் டோனர் என்றாலும் இறந்த நபரிடமிருந்து கல்லீரல் பெறப்பட்டாலும், மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி வாய்ப்புகள் 95 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே உள்ளன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், 2 வாரங்களுக்கு மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

பின்னர் ஒன்றரை மாதத்துக்கு வீட்டில் ஓய்வு அவசியம். அடுத்த 2- 3 மாதங்களுக்குள், அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம். சொல்லப்போனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் மீண்டும் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். கல்லீரல் தானம் கொடுக்கும் நபர் ஒரு வார மருத்துவ கண்காணிப்புக்குப் பின் வீட்டுக்குத் திரும்பலாம். விரைவில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

கல்லீரல் பரிசோதனை

கல்லீரலுக்காக எத்தனை நாள்கள் காத்திருக்க வேண்டும்? இது தொடர்பான அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் அனுமதி குறித்து விளக்க முடியுமா?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை இரண்டு விதமாகச் செய்யலாம். ஒன்று, கடாவர் அல்லது deceased liver transplant சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் பெயரை அரசின் பெயர் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். மூளைச்சாவு அடைந்து, உறுப்புகளை தானம் செய்ய முன் வருபவர்களிடம் இருந்து கல்லீரல் பெற்று, அறுவை சிகிச்சை செய்யப்படும்.

ஒவ்வோர் ரத்தப்பிரிவைப் பொறுத்து, காத்திருப்புக் காலமானது வேறுபடும். O அல்லது B வகையான ரத்தம் என்றால் ஒன்பது மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கும் . A அல்லது AB வகையான ரத்தப்பிரிவு என்றால் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.

பகுதி கல்லீரலை தானம் செய்தால், அது மீண்டும் வளருமா?

நகம், முடி போன்று கல்லீரலும் வளரும் தன்மை வாய்ந்தது. எனவே 60- 65 சதவிகிதம் வரை கல்லீரலை வெட்டி எடுக்கலாம். கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுமாயின், அப்போது 65 சதவிகிதம் வரை கல்லீரலை அகற்றுவர். அதன்பின் கல்லீரல் மீண்டும் வளர்ந்து வரும். லிவிங் டோனாரிடம் இருந்து ஒருபகுதி கல்லீரல் அறுவை சிகிச்சை மூலம் மற்ற நபருக்குப் பொருத்த முடியும். உதாரணமாக 60 கிலோ எடை உள்ள ஒரு நபரின் கல்லீரல் 1100-1400 கிராம் எடையைக் கொண்டிருக்கும். அவரிடமிருந்து நோயாளிக்காக 600 -700 கிராம் வரை கல்லீரலை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துக் கொள்ளலாம். இது 6- 8 வாரங்களில் வளர்ந்துவிடும்.

மதுபானம்

பார்ட்டி, சோஷியல் டிரிங்க்கிங், மேற்கத்திய உணவுக் கலாசாரம் போன்றவை, எந்தளவுக்கு கல்லீரல் மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

கல்லீரல் பிரச்னைக்கு மூலகாரணமே ஆல்கஹால்தான். அதைத்தவிர கல்லீரலில் கொழுப்பு படிந்து நோய் (non alcoholic fatty disease) ஏற்படும் நிலையும் உள்ளது. இவை இரண்டும்தான் 60 சதவிகித கல்லீரல் பாதிப்புக்கு மூலகாரணமாக இருக்கிறது. கடந்த 20- 30 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கத்திய கலாசாரம் அதிக அளவில் பின்பற்றப்படுகிறது. ஆல்கஹால் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இது கல்லீரல் பாதிப்புக்கு முக்கியமான காரணமாகும்.

சோஷியல் டிரிங்கிங் என்ற பெயரில் அதிக அளவில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வது, மேற்கத்திய டயட் பின்பற்றுவது, அதிக அளவு கார்போஹைட்ரேட்ஸ் எடுத்துக் கொள்வது, துரித உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சி இல்லாமை, அதோடு வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் வளர்சிதை மாற்ற நோய்கள், நீரிழிவு இவற்றின் காரணமாக நம் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடு மாறுகிறது. அந்நிலையில் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை கொழுப்பாக கல்லீரலில் படிந்து ,பிற்காலத்தில் கல்லீரல் செயலிழப்புக்குக் காரணமாகிறது.

ஆரம்பத்திலேயே கல்லீரல் நோயைக் கண்டறிவது எப்படி? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் எப்படியிருககும்?

கல்லீரல் நோயைப் பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில் எந்தவித அறிகுறியும் தென்படாது. மதுபானம் அதிகம் அருந்துபவர்களுக்கோ அல்லது ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பவர்களுக்கோ எந்தவித அறிகுறியும் இருக்காது. சில சமயங்களில் லேசான வலியை உணர முடியும். ஆனால் பலரும் அதை அசிடிட்டி என கடந்து செல்வர். கல்லீரல் நோய் மிகவும் தீவிரமான நிலையை அடையும் போது, அதாவது சிரோசிஸ் அல்லது கல்லீரல் மிகவும் சுருங்கிப்போய் காணப்படும்போதும் பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை.

சோர்வு, பசியில்லாமை, தசைகளில் சுருக்கம் ஆகியவை தான் முதல்கட்ட அறிகுறிகள். நோயின் தீவர நிலையில் தான் மஞ்சள்காமாலை, வயிற்றில் நீர் தேக்கம், ரத்த வாந்தி, உடலில் நச்சுப்பொருள்கள் தங்கி சுயநினைவு இல்லாமல்போவது, கால் வீக்கம் ஆகியவை தென்படும். கல்லீரல் நோயை மருத்துவப் பரிசோதனைகள் மூலமாகத்தான் அறிய இயலும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

அரசு காப்பீட்டு திட்டம் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வது சாத்தியமா?

தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் மூலமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது கண்டிப்பாக சாத்தியமானதாகும். டோனராக இருந்தாலும் இறந்தவர்களிடம் இருந்து பெறப்படும் கல்லீரல் என்றாலும், முழு பரிசோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தியபின், அந்த ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசாங்கம் அவற்றை ஆய்வு செய்த பின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்தக் காப்பீட்டு திட்டம் மூலமாக இலவசமாக கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என காப்பீட்டு திட்டம் மூலமாகப் பயன்பெறுபவர்கள் அநேகம்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகள் என்ன?

கல்லீரல் பாதிப்படைவதற்கு முக்கியமான காரணமே மதுபானம்தான். அதோடு ஆரோக்கியமில்லாத உணவு வகைகள், தேவையற்ற மருந்துகள் உட்கொள்வது, நீரிழிவு நோய் , உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமை, அதிகப்படியான கொலஸ்ட்ரால், உடல்பருமன், தற்போதைய வாழ்க்கைமுறை ஆகியவையும் கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன.

எனவே மதுப்பழக்கம் தவிர்த்தல், குறைந்த அளவில் கார்போஹைட்ரேட்ஸ் உணவை உட்கொள்ளுதல், தேவையில்லாத நாட்டு மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை மிகவும் முக்கியம். இதனால் கல்லீரல் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தவிர்க்க இயலும்.

உடற்பயிற்சி

லிவிங் டோனர் அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா?

லிவிங் டோனர்கான அறுவை சிகிச்சை, 100 சதவிகிதம் பாதுகாப்பானது. இந்தியாவில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் 1000-க்கும் மேற்பட்ட டோனர் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. கல்லீரல் கொடை வழங்கும் டோனரை தேர்ந்தெடுக்கும் முன் அவருக்குப் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். குறுகிய காலத்திலோ, இல்லை எதிர்காலத்திலோ அவருக்கு இதனால் எந்தவித பின் விளைவும் ஏற்படாது என்று உறுதி செய்த பிறகுதான் அவரது கல்லீரல் தானமாகப் பெறப்படும்.

முன்பெல்லாம் ஓப்பன் சர்ஜரி மூலம்தான் கல்லீரலின் ஒரு பகுதி அகற்றப்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக லேப்ராஸ்கோப்பி அல்லது ரொபோட்டிக் கருவி பயன்படுத்தி கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் எளிதில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது, அதோடு வலியும் குறைவாகவே காணப்படுகிறது. சிறு தழும்பு மட்டுமே வெளிப்புறத்தில் தெரியும் வகையில் இந்தச் சிகிச்சை முறை இருக்கிறது. அதோடு அறுவை சிகிச்சை செய்த டோனார் மூன்றில் இருந்து நான்கு நாள்களுக்குள்ளேயே வீட்டுக்குத் திரும்பும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்னென்ன?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இரண்டு விதமாகச் செய்யலாம். மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானம் செய்ய முன் வருபவர்களிடமிருந்து கல்லீரல் பெற்று, அறுவை சிகிச்சை செய்யப்படும். இதை கடாவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பர். இதைப் பொறுத்தவரை குறிப்பிட்ட நபரின் ரத்தப்பிரிவுக்கு ஏற்றவாறு அமையும் வரை மூன்று மாதத்திலிருந்து ஒன்பது மாதம் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கும். காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நபரின் ரத்தப் பிரிவுக்கு ஏற்ற டோனர் கிடைக்கும் போது அரசே அதைத் தெரியப்படுத்தும்.

கல்லீரல்

லிவிங் டோனாரை பொறுத்தமட்டில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருக்கும் நபரின் குடும்ப உறுப்பினர்களில் 18- 55 வயதுக்குட்பட்டவர்கள் முன்வந்தால், அவர்களின் கல்லீரலில் சிறு பகுதி அறுவை சிகிச்சை மூலம் இவருக்குப் பொருத்தப்படும். லிவிங் டோனாருக்கு அவர்களின் கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு பின் 6- 8 வாரங்களுக்குள் மீண்டும் வளர்ந்து வந்துவிடும். அதுபோல அதைப் பெறும் நபருக்கும் 2-3 மாதங்களில் கல்லீரல் வளர்ந்து வந்துவிடும். இது லிவிங் டோனர் லிவிர் ட்ரான்ஸ்ப்ளான்ட் எனப்படும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...