பிரேசிலை சேர்ந்த பிரபல உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சரான லாரிஸா போர்ஜஸ், இரட்டை மாரடைப்பால் உயிரிழந்தார். 33 வயதில் அவர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லாரிஸா போர்ஜஸ். 33 வயதான இப்பெண், ஃபிட்னெஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அத்துடன் ஃபேஷன், சுற்றுலா குறித்த தகவலைகளையும் வெளியிட்டு சமூகவலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராக திகழ்ந்தவர்.
சமீபத்தில், திடீரென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த திங்கள்கிழமையன்று உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்பினை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அதில், ``33 வயதேயான மிகவும் அன்பான ஒருவரை இழப்பது மிகவும் வலி மிகுந்தது. எங்கள் இதயம் நொறுங்கி விட்டது! நாங்கள் உணரும் ஏக்கமும், வலியும் விவரிக்க முடியாதது. அவர் மிகவும் தைரியமாகப் போராடினார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
பிரேசில் நாட்டின் உள்ளூர் ஊடக செய்தி அறிக்கைபடி, ஆகஸ்ட் 20-ம் தேதி கிரமோடா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, லாரிஸாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து கோமா நிலைக்குச் சென்று அவர், சற்று நேரத்தில் இரண்டாம் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். முதல் கட்ட விசாரணையில், அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மதுபானங்களுடன் கூடிய போதைப் பொருள்களை லாரிஸா உட்கொண்டதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக, இது குறித்து விசாரித்து வரும் துணை ஆய்வாளர் குஸ்டாவோ பார்செலோஸ் தெரிவித்தார். லாரிசா தனது ஃபாலோயர்ஸுக்கு இன்ஸ்டாகிராமில் வழக்கமாக தனது ஃபிட்னெஸ், ஃபேஷன் குறித்துப் பதிவிடும் வழக்கமுடையவர். இவருக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
Comments
Post a Comment