Doctor Vikatan: எனக்கு சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் எதுவும் இல்லை. வயது 55. தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அப்படி சாப்பிட்டு எழுந்திருக்கும்போது கால்கள் மரத்துப் போகின்றன. எப்போதும் இப்படித்தான் ஆகிறது. கை, கால்கள் மரத்துப் போக என்ன காரணம்.... இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
பொதுவாகவே நாம் சப்பணமிட்டு தரையில் உட்காரும்போது கால் பாதங்கள் மரத்துப்போக வாய்ப்பு உண்டு. இதை 'ஸ்லீப்பிங் ஃபுட் சிண்ட்ரோம்' (Sleeping Foot Syndrome) என்று சொல்வோம். பெரோனியல் நரம்பின்மீது இடுப்பிலுள்ள எலும்பு ஒன்று அழுத்தம் கொடுப்பதால் பாத நரம்புகளுக்கான சிக்னல் சரியாகப் போவதில் தடை ஏற்படலாம். அதன் விளைவாக மரத்துப்போன உணர்வு வரும்.
ஒருவேளை இந்தப் பிரச்னை சப்பணமிட்டு உட்காராத நிலையிலேயே வந்தால்தான் இது குறித்து பயப்பட வேண்டும். 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless Legs Syndrome) என்ற பாதிப்பு கணுக்கால் தசைகளில் சிலருக்கு வரலாம். இந்தப் பிரச்னையில் கணுக்கால் தசைகளில் வலி இருக்கும். அந்தப் பிரச்னை இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாடோ, வைட்டமின் பி 12 குறைபாடோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குறைபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதற்கான சப்ளிமென்ட்டுகள் கொடுத்தாலே சரியாகிவிடும்.
மற்றபடி உங்களுக்கு வருவதாகக் குறிப்பிட்டிருக்கும் மரத்துப்போதல் பிரச்னை குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. சப்பணமிட்டு உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கால்களை அசைத்தாலே இதைத் தவிர்க்கலாம். நான் ஏற்கெனவே சொன்னது போல சும்மா இருக்கும்போதோ, நடக்கும்போதோ கால்கள் மரத்துப்போனால் அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment