Doctor Vikatan: எப்போதும் தீராத உடல்வலி இருக்கிறது. வைட்டமின் குறைபாடுகள் எதுவுமில்லை. தைராய்டு, ரத்தப் பரிசோதனை மற்றும் எலும்பு தொடர்பான பரிசோதனைகளையும் செய்து பார்த்து விட்டோம். எதிலும் குறையில்லை, ஆனாலும் உடல்வலியும், சோர்வும் தொடர என்ன காரணம்?
- Saravanan, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
அளவுக்கதிக களைப்பும் சோர்வும் உள்ளதாகச் சொல்பவர்களுக்கு முதலில் வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று பரிசோதிப்போம். தைராய்டு, அனீமியா உள்ளதா என்று பார்ப்போம். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் நம்மூரில் மிகவும் சகஜம். இதைத் தாண்டி வேறு காரணங்களை யாரும் யோசிப்பதில்லை.
தசைகளில் வலி இருப்பதாக உணர்ந்தால் அந்தத் தசைகள் இறுக்கமாகியிருக்கலாம். உடற்பயிற்சிகள் செய்யும்போது இதுபோன்ற தசை இறுக்கம் நீங்கும். எலும்புகளும் தசைகளும் வலுவடையும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா, ஜங்க் உணவுகள் சாப்பிடுவோர், தான் நன்றாகச் சாப்பிடுவதாகவும் தனக்கு எனர்ஜி நன்றாக இருக்கும் எனவும் நம்புவார்கள். ஆனால் அப்படியில்லை.
அடிக்கடி வெளியில் சாப்பிடுவதும் அதிகமான அசைவம் சாப்பிடுவதும் உடலில் ஒருவித மந்தத் தன்மையை ஏற்படுத்தி, களைப்பைக் கொடுக்கும். போதுமான தூக்கம் மிகமிக முக்கியம். ஒருநாள் நன்றாகத் தூங்கவில்லை என்றாலே, அடுத்த நாள் நம் எனர்ஜி வெகுவாகக் குறைவதை உணர முடியும். எல்லோருக்கும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.
ஆனால் பலரும் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சரியான தூக்கமின்றி இருப்பார்கள். தூக்கக் கடனை சேர்த்துக்கொண்டே போவார்கள். இன்று ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்கினால், மறுநாள் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கி ஈடுகட்டலாம் என நினைக்கக்கூடாது. இன்னும் சிலர் 10 மணி நேரம்கூட தூங்குவார்கள். ஆனால் அந்தத் தூக்கம் முழுமையாக இல்லாவிட்டால் மனது ஓய்வை உணராது.
ஆழ்ந்த உறக்கம்தான் மனதை அமைதிப்படுத்தும். அடுத்தநாள் வேலைக்குத் தேவையான புத்துணர்வைத் தரும். நம்மில் பலரும் வாரத்தில் 5 நாள்கள் சரியாகத் தூங்கிவிட்டு, வார இறுதியில் வெளியே செல்வது, தாமதமாகச் சாப்பிடுவது, தாமதமாக உறங்குவது என இருப்பார்கள். அது அடுத்து வரப்போகும் வாரத்தில் நிச்சயம் பிரதிபலிக்கும். இள வயதில் உடல் ஓரளவு இதைச் சமாளித்துக் கொள்ளும். 40-க்குப் பிறகு சிரமமாகும். 60 ப்ளஸ்ஸில் அதிக பிரச்னைகளைத் தரும்.
அடுத்ததாக மனநலம்... ஸ்ட்ரெஸ், அதன் விளைவாகத் தூக்கமின்மை, கவலை போன்றவை தொடரும் பட்சத்தில் அவற்றின் விளைவுகள் உடல்ரீதியாகவும் வெளிப்படும். சிலருக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளால் ஸ்ட்ரெஸ் வரும்.
இன்னும் சிலருக்கு எப்போதுமே ஸ்ட்ரெஸ் இருக்கும். அது மனநலனை பாதித்து, உடல் களைப்பு, சோர்வு, தசைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். இதை 'சொமட்டைசேஷன் ஆஃப் மென்ட்டல் ஹெல்த்' ( somatization of mental health) என்போம். அதாவது மனநல பிரச்னைகளால் வரும் உடல்நல பாதிப்புகள்.
எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் விஷயத்தில் பிரச்னைக்கு என்ன காரணம் என அறிந்து அதைச் சரியாக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment