Doctor Vikatan: ஹியரிங் எய்டு போடுவதால் காதின் உண்மையான கேட்கும் திறன் குறைந்துவிடும் என்பது சரியா? அதை எப்போதும் அணிந்திருக்க வேண்டுமா? ஹியரிங் எய்டு பொருத்திக்கொண்டால், ஃபாலோ அப் சிகிச்சைகள் அவசியமா? எத்தனை நாள்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்?
- AYYAVU MUTHU, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
ஹியரிங் எய்டு அணிவதால் காது கேட்கும் திறன் குறைய வாய்ப்பு இல்லை; மாறாக, காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள், ஹியரிங் எய்டு பயன்படுத்தாமல் இருந்தால் தினமும் அவர்கள் கேட்டு; புரிந்து கொள்ளும் பேச்சின் அளவு கணிசமாகக் குறையும், இதனால் (வார்த்தைகளை) புரிந்து கொள்ளும் மூளையின் திறன் குறைய வாய்ப்புள்ளது.
இந்தக் காரணத்தினால், ஓர் அளவுக்கு மேல் காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு ஹியரிங் எய்டு பரிந்துரை செய்கிறோம்; அவற்றை தூங்கும் நேரம் தவிர, எந்நேரமும் போட்டுக் கொள்வது நல்லது.
கேட்கும் திறன் தவிர காதில் வேறு பிரச்னை இல்லாதவர்கள் ரெகுலர் ஃபாலோ ஆப் செய்யத் தேவை இல்லை. ஆனால் முதுமைப்பருவத்தில் ஏற்படும் காது கேட்கும் திறன் குறைவு, நாள்பட மோசமாக வாய்ப்புள்ளது. இந்தக் காரணத்திற்காக வருடம் ஒருமுறை காது கேட்கும் திறனை பரிசோதித்து, ஹியரிங் எய்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஹியரிங் எய்டு கருவிகளை, சரியாகப் பராமரித்தால் 10, 15 வருடங்கள் வரை நன்றாக வேலை செய்யும். ஒவ்வொரு கருவிக்கும் எந்த அளவு காது கேட்கும் திறன் குறைவை சரி செய்ய முடியும் என்பதற்கு ஒரு ரேஞ்ச் (range) உள்ளது. ஒருவருடைய காது கேட்கும் திறன் அந்த ரேஞ்சை தாண்டி சென்றுவிட்டால் கருவியை மாற்ற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment