Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றை ஸ்லைஸ் செய்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடிக்கும் டீடாக்ஸ் வாட்டர் உண்மையிலேயே உதவுமா? அதன் பலன் என்ன? இதைத் தயாரிக்கும் சரியான முறை என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்
உடலானது தன்னைத்தானே தினமும் டீடாக்ஸ் எனப்படும் நச்சுநீக்கத்தைச் செய்து கொள்ளும். உங்களுடைய கல்லீரலும் சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருந்தால் இந்தச் செயல் தானாக நடக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினமும் உங்கள் உணவில் நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது மட்டும்தான். அதாவது ஒவ்வொரு வேளை உணவுடனும் நீங்கள் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும்.
வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம். எலுமிச்சையை ஜூஸாக குடிக்கலாம். தினமும் 3 டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். சீரகம், ஓமம், மிளகு போன்றவை செரிமானத்தை சீராக்குபவை என்பதால் அவற்றை ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் தேவையற்ற இனிப்புகளைத் தவிர்த்து விடவும். சரியான நேரத்துக்குத் தூங்கிப் பழகவும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நிறைய மூலிகைகளைச் சேர்த்த தண்ணீரை 'டீடாக்ஸ் வாட்டர்' என சொல்லிக் கொண்டு குடிக்கிற நபர்கள் இருக்கிறார்கள். அப்படிச் செய்வதால் உடலிலுள்ள கொழுப்பும் நச்சுகளும் கரைந்து வெளியேறி விடாது. அவற்றை எல்லாம் சேர்ப்பதால் தண்ணீரின் சுவையும் மணமும் மாறும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள் இப்படிக் குடிக்கலாம்.
உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதால் மலச்சிக்கல் இருக்காது. குடல் இயக்கம் சீராக இருக்கும். புத்துணர்வாக இருப்பது போல உணர்வார்கள். அவ்வளவுதானே தவிர, அந்தத் தண்ணீர் வேறு எந்த மேஜிக்கையும் நிகழ்த்தாது. இந்தத் தண்ணீருககு பதில் நீர்மோர், இளநீர், ரசம் போன்றவற்றைக் குடித்தாலும் அதே பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சமூக ஊடகங்களில் பரவும் விஷயங்களைக் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றாதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment