Doctor Vikatan: எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அடிக்கடி அந்தரங்க உறுப்புத் தொற்று வருகிறது. அரிப்பு, புண்ணாவது என அவதிப்படுகிறார்கள். ஒருவருக்கு வந்தால் இது மற்றவர்களுக்கும் பரவுமா? துணிகளை வெந்நீரில் அலசினால் இந்தப் பிரச்னை வராமல் தடுக்க முடியுமா? கேண்டிட் பவுடர் உபயோகிப்பது சரியானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.
அந்தரங்க உறுப்பில் அரிப்பு என்பது பொதுவாக பூஞ்சைத் தொற்றின் (fungal infection) அறிகுறியாக இருக்கலாம். அது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். ஊசிப்புழுக்கள் அல்லது நூல் புழுக்கள் (Pinworm) என்பவை தொற்றினாலும் அதன் காரணமாக அரிப்பும் அது மற்றவருக்குப் பரவுவதும் இருக்கும். இந்தப் புழுக்கள் நம் குடல் பகுதியில் இருக்கும். குட்டிக்குட்டியாக இருக்கும் இவை நம் உள்ளாடைகளில், படுக்கை விரிப்புகளில், டவல்களில் இருக்கும். ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் உபயோகிக்கிற டிடெர்ஜென்ட் கூட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதன் காரணமாகவும் அரிப்பு ஏற்படலாம். ஒருவருக்கு அரிப்பு வருகிறது என்றால் அவரை நேரில் பார்த்து, அறிகுறிகளையும் பிற தகவல்களையும் கேட்டறிந்தால்தான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். குடும்பத்தில் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் அரிப்புக்கு பிரதான காரணம் பூஞ்சைத் தொற்று என்றாலும் எப்போதும் அதையே காரணமாகக் கருத முடியாது.
இவை தவிர ஸ்கேபிஸ் எனப்படும் பூச்சித்தொற்றும் அரிப்புக்கு காரணமாகலாம். இது பாதித்தால் சருமத்தில் குட்டிக்குட்டி கொப்புளங்களும் அரிப்பும் ஏற்படும்.
எனவே அரிப்புக்கான காரணம் தெரியாமல் நீங்கள் கேட்டதுபோல ஏதோ ஒரு பவுடரையோ, ஆயின்மென்ட்டையோ உபயோகிப்பது சரியான தீர்வாகாது.
துணிகளை வெந்நீரில் அலசுவதும் வெயிலில் உலர்த்துவதும் மட்டுமே இந்தப் பிரச்னைக்கான தீர்வாகாது. முதலில் பிரச்னைக்கான காரணம் அறிந்து, சிகிச்சையை எடுங்கள். கூடவே உள்ளாடைகளை வெந்நீரில் அலசி, வெயிலில் உலர்த்துவதையெல்லாம் செய்யலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment