Doctor Vikatan: மாதுளை, திராட்சை போன்ற பழங்களை விதையுடன் உண்பது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துமா?
- Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
ஆரோக்கியமான உடல்நலம் உள்ளவர்கள், விதைகளுடன் உள்ள பழங்களைச் சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதுவே 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' மாதிரியான குடல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள், விதைகளுடன் உள்ள பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அவர்களுக்கு அந்த விதைகள் செரிமானமாவதில் பிரச்னைகள் வரலாம். அந்த விதைகளின் காரணமாக அவர்களுக்கு குடல் பிரச்னைகள் தீவிரமாகலாம். அடிக்கடி மலம் கழிக்க வேண்டி வரலாம்.
மற்றபடி ஆரோக்கியமானவர்களுக்கு விதைகள் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியத்துக்கு உதவும். இன்று வசதியின் காரணமாக பலரும் விதையில்லா (சீட்லெஸ்) பழங்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். உதாரணத்துக்கு விதையில்லாத திராட்சைகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பிறகு தனியே 'கிரேப்சீட் எக்ஸ்ட்ராக்ட்' என்ற பெயரில் விதைகளின் சாரத்தை ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கிச் சாப்பிடுவோரும் இருக்கிறார்கள்.
அதே போல எந்தப் பழத்தையும் அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. அதை அரைத்து வடிகட்டி, கூடுதல் இனிப்பும் பாலும் சேர்த்து ஜூஸாகவோ, மில்க் ஷேக்காகவோ குடிப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
மாதுளம் பழம், திராட்சை போன்றவற்றை விதைகளுடன் அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. வயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டும் இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் போதுமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment