இளம் வயதில் ஏற்படும் மனச்சோர்வானது, வயதான காலத்தில் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவகையான மறதி நோயான டிமென்ஷியாவுக்கும், மனச்சோர்வுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆராய்ச்சியை நிபுணர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை மருத்துவத்துறை வல்லுநர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வகையில், JAMA Neurology இதழின் சமீபத்திய பதிப்பில், டிமென்ஷியா குறித்த புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், இளம் வயதில் ஏற்படும் மனச்சோர்வானது, வயதான காலத்தில் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது 1977 முதல் 2018-ம் ஆண்டுக்கு இடையே, 1.4 மில்லியனுக்கும் அதிகமான டேனிஷ் குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வு ஆசிரியரும், தொற்றுநோயியல் நிபுணரும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மருத்துவருமான ஹோலி எல்சர் கூறினார்.
மனச்சோர்வு நோய் கண்டறியப்பட்டவர்கள் அல்லது இல்லாதவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் பிற்கால வாழ்க்கையில் யாரெல்லாம் டிமென்ஷியாவுக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிய, பல ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கல்வி, வருமானம், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற காரணிகள் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய பெரிய தரவுத்தொகுப்பு மற்றும் பல பகுப்பாய்வுகள், அவர்களின் கண்டுபிடிப்புகளை வலுவானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வு, டிமென்ஷியா ஆபத்து மற்றும் மனச்சோர்வு நோயறிதல்களுக்கு இடையே ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் உண்டாகும் மனச்சோர்வு, பெரும்பாலும் டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது, மேலும் பல முந்தைய ஆய்வுகள், இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டியுள்ளது.
ஆராய்ச்சி முடிவுகள் மனச்சோர்வு, முதுமை மறதியின் ஆரம்ப அறிகுறி மட்டுமல்ல, மனச்சோர்வு டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்களை வழங்குவதாக, மருத்துவர் ஹோலி எல்சர் கூறியுள்ளார்.
மனச்சோர்வு என்பது பரவலாக உள்ளதையும், நிகழ்காலத்தில் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது, எதிர்கால நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
Comments
Post a Comment