‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கடந்த அத்தியாயத்தில், ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகளில் எவ்வாறு ரத்தச் சர்க்கரை குறைவு (Hypoglycemia) ஏற்படுகிறது என்பதை விரிவாகக் கண்டோம். இந்த அத்தியாயத்தில், அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்:
29-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளில், பிறந்ததில் இருந்து 2, 6, 12, 24, 48 மற்றும் 72 மணி நேரத்தில் ரத்தச் சர்க்கரை அளவினை (ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை) கண்டறிய வேண்டும். இவ்வாறு, ரத்தச் சர்க்கரை குறைவு அபாயமுள்ள பச்சிளங்குழந்தைகளில் செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை மூலம், எவ்வித அறிகுறிகளும் தென்படுவதற்கு முன்னால் ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்பட்டால், அதனை அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு என்கிறோம்.
குளுக்கோஸ் மானி/ குளுக்கோமீட்டர் (Glucometer) மூலம் இவ்வாறு செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனையில், அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்படும்போது, ரத்தச் சர்க்கரை அளவு 20-40 mg/dL எனில், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தையால் சரிவர தாய்ப்பாலை சப்பிக் குடிக்க முடியவில்லையென்றால், விரல்களால் தாய்ப்பலைப் பீய்ச்சி (expressed breast milk), பாலாடையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஒருவேளை, போதுமான அளவு தாய்ப்பால் வரவில்லையென்றால், பாலாடையில் பவுடர் பாலை அளிக்கலாம்.
அதன்பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, குழந்தையின் ரத்தச் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். மீண்டும் பார்க்கப்பட்ட ரத்தச் சர்க்கரை அளவு 40 mg/dL-க்கு மேலென்றால், அதன்பிறகு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மற்றும் அடுத்த 48 மணிநேரத்திற்கு, 6 மணிநேரத்திற்கு ஒரு முறையென ரத்தச் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மாறாக மீண்டும் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரையின் அளவு 40 mg/dL-க்கு கீழ் என்றால், ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் (IV Dextrose)-ஐ மருத்துவர் தொடங்குவார்.
மாறாக, முதன்முதலில் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரையின் அளவு 20 mg/dL-க்கு கீழ் இருந்தால், நேரடியாக ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் கொடுக்கத் தொடங்குவோம். அதன் பிறகு, 30 நிமிடங்கள் கழித்து, மீண்டும் ரத்தச் சர்க்கரையின் அளவு கண்டறியப்படும்; சரியாக இருக்கும்பட்சத்தில், 6 மணிநேரத்திற்கு ஒருமுறையென ரத்தச் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
மீண்டும் சரிபார்க்கப்பட்ட ரத்தச் சர்க்கரை அளவுகள் சரியாக இருக்கிறதென்றால், 24 மணிநேரத்திற்குப் பிறகு 6 மணிநேரத்திற்கு ஒருமுறையென ரத்த நாளத்தின் வழியாக கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு குறைக்கப்பட்டு, பின்பு முழுவதுமாக நிறுத்தப்படும். 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்வது மிக முக்கியமாகும்.
வரும் அத்தியாயத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு, அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவிற்கான சிகிச்சை முறைகள் பற்றி பார்க்கலாம்.
பராமரிப்போம்...
Comments
Post a Comment