நாடு முழுவதும் பல மனநல மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் உறவினர்களால் சேர்க்கப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைந்த பிறகும், அவர்கள் தங்களது வீட்டிற்குத் திரும்ப முடியாமல் போய்விடுகிறது. அவர்களை உறவினர்களே கைவிட்டு விடுகின்றனர். இதுபற்றி அவ்வப்போது பேசப்படுவதுண்டு.
இந்நிலையில், டெல்லியில் மனநலம் குறித்த தேசிய மாநாடு நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண் குமார் மிஸ்ரா, மனநல நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகும் கைவிடப்படும் நிலைபற்றி பேசினார்.
’’குணமடைந்த நோயாளிகள் தங்கும் இடமாக மருத்துவமனைகள் இருக்கக்கூடாது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் இருந்து 2023ம் ஆண்டு ஜனவரி வரை நாடு முழுவதும் உள்ள மனநல மருத்துவமனைகளில் தேசிய மனித உரிமை கமிஷன் ஆய்வு செய்தது. இதில் குணமடைந்த நிலையில் 2000 பேர் தங்களது சொந்த ஊருக்குச் செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி இருக்கின்றனர். அவர்களால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. அவர்களில் 50 சதவிகிதம் பேர் மேற்கு வங்க மருத்துவமனைகளில் இருக்கின்றனர்.
மருத்துவமனைகள் குணமடைந்த நோயாளிகளுக்கான இடம் கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபம் காட்டுவது மட்டும் போதுமானது கிடையாது. மனநிலை பாதித்தவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படவேண்டும். பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பல்வேறு விதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநோயை சரி செய்ய இரக்கத்தை வரவழைக்கும் உரையாடல்கள் அவசியம்’’ என்று குறிப்பிட்டார்.
மனித உரிமை கமிஷன் ஆரம்பத்தில் குவாலியர், ராஞ்சி, ஆக்ரா மனநல மருத்துவமனைகளை ஆய்வு செய்தது. அதில் கிடைத்த அறிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கும் 47 மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டதாக மனித உரிமை கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பேசிய அமைச்சர் பிரவின் பவார், மனநல பிரச்னையை பொது சுகாதார பிரச்னையாக கருதி அதனை சரி செய்வதில் அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் மனநல மருத்துவமனை இருக்கிறது. இம்மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் கொண்டு வந்துவிட்டு விட்டு சென்று விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் வந்து பார்ப்பதோ, நிதியுதவி செய்வதோ கிடையாது. அதோடு குணமடைந்துவிட்டதாக தகவல் கொடுத்தாலும் வந்து அழைத்து செல்வதில்லை என்று மனநல மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment