போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், மருந்து அட்டைகளில் இனி QR code அச்சிடுவது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆய்வு செய்து விற்பனைக்கு அனுமதிக்கின்றன. இந்திய சந்தையில் உள்ள அனைத்து பொதுவான மருந்துகளில் சுமார் 4.5% தரமற்றவை என்று 2018-ம் ஆண்டில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது.
2019-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் வழங்கப்படும் மருந்துகளில் 20% வரை போலியானவை. அனைத்து மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டாலும் கூட, போலி மருந்துகளின் விற்பனையை முற்றிலுமாய் தடுக்க முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில், போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் உயிர்காக்கும் 300 மருந்து அட்டைகளிளல் QR Code அச்சிடுவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகின்றது.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உட்பட சில முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில், QR bar code அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அவற்றில் டோலோ, ஆக்மென்டின், ஆஸ்தானில், அலெக்ரா, லிம்சி, காா்ல்பால், தைரோநாா்ம், கோரெக்ஸ் போன்ற மருந்துகள் முக்கியமானவை.
இந்த குறியீட்டை ஸ்கேன் செய்தால், மருந்தின் உட்கூறுகள் விவரம், உற்பத்தி தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெறலாம்.
போலி மருந்தின் விற்பனையைக் குறைக்கவும், நல்ல தரமான மருந்துகள் மக்களைச் சென்றடைவதற்கும் இந்த நடைமுறை வழிவகுக்கிறது. இதனால் நுகர்வோர் வாங்கும் பொருள்களின் முழு விவரங்களையும் கண்டறிய முடியும்.
- இர. மு. ரமா
Comments
Post a Comment