Doctor Vikatan: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதைத்தானே அனீமியா என்கிறோம்.... அதுதான் பிரச்னைக்குரியது என கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிப்பதும் பிரச்னைதான் என்கிறாள் என் தோழி, அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.
ரத்த வெள்ளை அணுக்களில் உள்ள புரதத்தையே ஹீமோகுளோபின் என்கிறோம். ஹீமோகுளோபின் என்பது வயதுக்கேற்ப மாறும். தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஃபீட்டல் ஹீமோகுளோபின் இருக்கும். பிறந்ததும் அது அடல்ட் ஹீமோகுளோபினாக மாறும். அதுதான் நிரந்தரம்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இது 12 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 11 அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆண்களுக்கு 13 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
ஆண்களைப் பொறுத்தவரை இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகமில்லை. மாதவிலக்கின் போது மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு ரத்த இழப்பு ஏற்படுவதால் பெண்களிடம்தான் இந்தப் பிரச்னை அதிகம்.
ஒரு மில்லி ரத்தத்தில் ஒரு மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கும். தலசீமியா பாதிப்பில் மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும். மஜ்ஜை பாதிப்பால் வரும் ஏபிளாஸ்டிக் அனீமியாவுக்கும் (Aplastic anemia) ரத்தம் ஏற்ற வேண்டிய தேவைப்படலாம். எலும்புகளுக்குள் உள்ள மஜ்ஜையிலிருந்துதான் தினமும் ரத்தமானது ஃபேக்டரி போல உற்பத்தியாகி வருகிறது. ஃபேக்டரி உற்பத்தியில் பிரச்னை வரும்போது மஜ்ஜை பாதிக்கப்படுகிறது. அதை 'போன் மாரோ ஃபெயிலியர்' அதைத்தான் 'ஏபிளாஸ்டிக் அனீமியா' என்கிறோம். புற்றுநோயைவிடவும் ஆபத்தான நோய் இது. இந்த பாதிப்பில் அவசரமாக மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
இவர்களுக்கெல்லாம் இரும்புச்சத்து மிகுதி (அயர்ன் ஓவர்லோடு) ஏற்படும். இது ரத்தத்தை பாதிக்கிற பிரச்னையல்ல.
நாளமில்லா சுரப்பிகளான கல்லீரல், கணையம்,பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி போன்ற உறுப்புகளை பாதிக்கும். எனவே நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். ரத்தத்தில் இரும்புச்சத்து மிகுதியாவதும் ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயம்தான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment