Doctor Vikatan: நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ள ஒருவருக்கு தினமும் குறிப்பிட்ட அளவு மது அருந்தும் பழக்கம் இருந்தால் அவரது ரத்தக்கொழுப்பு அளவு அதிகரிக்குமா? அசைவ உணவுகள் தவிர்த்து மதுவுடன் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வதால் மதுவின் பாதிப்புகளைத் தவிர்க்க முடியுமா?
-inc, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
மது அருந்துவது என்பதே ஆரோக்கியமற்ற பழக்கம்தான். அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆரோக்கியமான வேறு விஷயங்களின் மூலம் ஈடுகட்டிவிட முடியும் என நினைப்பதே தவறானது.
நடைப்பயிற்சி செய்வது என்பது நிச்சயம் நல்ல விஷயம்தான். கூடவே மது அருந்துவதையும் தொடர்வதுதான் தவறானது. அரிதாக என்றோ ஒருநாள் மிதமான அளவு மது அருந்துகிறவர் என்றால் பிரச்னையில்லை. அதுவும் அந்த நபருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
உங்கள் விஷயத்தில் இவையெல்லாம் இருக்கின்றனவா என பரிசோதனை செய்து பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதும் முக்கியம். சிலருக்கு இப்படிப்பட்ட இணைநோய்கள் இருப்பதே தெரியாமலிருப்பார்கள். வேறு பிரச்னைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போதுதான் இவை இருப்பது தெரியவரும்.
மது அருந்துவன் பாதிப்பைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், பருப்புகள் சாப்பிடலாமா என கேட்டிருக்கிறீர்கள்.... மது அருந்துவதே தவறானதுதான். நீங்கள் மதுப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டு அசைவமும் சாப்பிடலாம், பழங்கள், காய்கறிகளும் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலும் நீங்கள் மதுப்பழக்கத்தைக் கைவிடாத வரையில் அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment