இந்தியாவில் 61% இளைஞர்கள் இ - சிகரெட்டைப் பயன்படுத்துவதாகவும், அதனைப் பயன்படுத்தாதவர்கள் கூட இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.
இ-சிகரெட் என்பது Electronic Nicotine Delivery Systems (ENDS) என்பதாகும். இதில், சிகரெட் புகையிலைக்கு மாறாக, ஆவியாகும் தன்மை கொண்ட ஒரு கரைசலில், வேதிப்பொருள்கள் மற்றும் நிக்கோடின், புரோப்பலீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருள்களும் இருக்கும். இ - சிகரெட்டானது பேனா போன்ற பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கிறது.
இந்த நிலையில், இ - சிகரெட் பயன்பாடு குறித்து, ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் 456 பேர் உட்பட சர்வதேச அளவில் 4,007 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், புகையிலை பயன்பாட்டிற்குப் பிறகு, இ - சிகரெட் இரண்டாவது பெரிய பாதிப்பை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்த இ - சிகரெட்டை பயன்படுத்துபவர்களில் 61% பேர், 15 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். மேலும் இ - சிகரெட் பயன்படுத்துவோரால், அதனை பயன்படுத்தாதவர்கள் கூட எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றின்படி, இளைஞர்கள் பயன்படுத்தும் இத்தகைய இ - சிகரெட்டால் எளிதில் பாதிக்கப்படுவது, அதிகளவில் பொதுமக்கள்தான். இதில் வெளிப்படும் நிக்கோடின், வளரும் மூளையையும் வெகுவாக பாதிக்கின்றது.
இந்தியாவில் இ - சிகரெட்டைப் பயன்படுத்தாதவர்களிடம் மேற்கொண்ட சர்வேயில், 51% பேர் இதை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், 49% பேர் நண்பர் வழங்குவதால் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். நம் நாட்டைப் பொறுத்தவரை, ஆய்வில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (47%) இ - சிகரெட் பற்றி விளம்பரம் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளனர். இந்த ஆய்வில் பதிலளித்த இந்தியர்களில் அதிகமானோர் உயர்கல்வி பெற்றவர்கள் மற்றும் அதிக வருமானம் கொண்டவர்கள்.
இ - சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன. இந்தியாவில் இ - சிகரெட் பயன்படுத்துபவர்களை அதன் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க, இ - சிகரெட் (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) தடைச் சட்டம், 2019-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வந்தாலும், இ - சிகரெட்டுகளை சில்லறை விற்பனையாளர்களிடம் அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் பயனாளர்கள்.
இந்தியாவின் புகையிலைச் சந்தையானது உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 27% பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர்.
எனினும், இ - சிகரெட் விளம்பரங்களை முழுமையாகத் தடை செய்வதோடு, அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளை எடுத்துள்ளனர். ``இந்தியாவில் இளைஞர்கள் இ - சிகரெட்டை அதிகம் பயன்படுத்தி வருவதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment