'இயற்கையோடு இணைந்து வாழ்' என்று கூறிய காலம் போய், `செயற்கை ரசாயனப் பொருள்களில் இருந்து ஒதுங்கி வாழ்' என்று கூறுமளவுக்கு, நாம் அதிகப்படியான ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி, வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In - Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இப்படி நாம் உபயோகப்படுத்தும் வாசனைப் பொருள்களில் சுமார் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாக, உலக நறுமணப் பொருள்கள் சங்கம் (International Fragrance Association) கூறுகிறது. இந்த ரசாயனம் கலந்த நறுமணங்களை நம்மை அறியாமல் நாம் சுவாசிக்கும்போதும், அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி போன்றவற்றில் இருந்து வரும் புகையை சுவாசிக்கும் போதும், உடல்நலம் சார்ந்த பல பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம்.
வீட்டில் பயன்படுத்தும் அறை வாசனையூட்டி, சென்ட், தரை சுத்திகரிப்பான் போன்றவற்றில், ஃபார்மாலடீஹைடு உள்ளது. இது நம் உடல்நலத்திற்கு ஆபத்து என்பதையும் தாண்டி, எளிதில் தீப்பற்றக்கூடியதும் கூட. வாசனை மெழுகுவத்தியில் உள்ள பாரபின், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதுகுறித்து, நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸிடம் கேட்டோம்...
``அறை வாசனையூட்டி, கழிப்பறை வாசனையூட்டி, கொசு விரட்டி, கொசுவத்தி எதுவாக இருந்தாலும் அவற்றை நாம் சுவாசிக்கும் போது அவை நமக்கு தொண்டை, கண் மற்றும் மூக்குப் பகுதிகளில் அதிகப்படியான எரிச்சலை ஏற்படுத்தும். காரணம் இவை அனைத்தும் பென்சீன் சம்பந்தப்பட்ட கரிமச் சேர்மங்கள்.
நல்ல உடல்நலத்துடன் இருக்கும் மக்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் சாதாரண இருமல் மற்றும் தும்மலுடன் அவர்கள் கடந்து சென்று விடுவார்கள். அதே சமயம் ஏற்கெனவே ஆஸ்துமா, தொண்டை எரிச்சல் உள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்தினால், நிலைமை சற்று மோசமாகி உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.
தனிநபர் வாசனையூட்டி மனிதர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வாசனை மெழுகுவத்தி மற்றும் ஊதுபத்தி போன்றவற்றை வீட்டில் வாசனைக்காக சில நேரம் பயன்படுத்துவது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் அதைவிட அதிகமாக நச்சுள்ள காற்றை நாம் பொது இடங்களிலும், தொழிற்சாலை பகுதிகளிலும் சுவாசிக்கிறோம்.
ஆகவே வீட்டில் நல்ல காற்றோட்டத்துடன் மன அமைதிக்காக இவற்றைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தாது. அதே சமயம் தொடர்ந்து பலமணி நேரம் அந்த வாசனையில் இருப்பவர்க்கும் அது தொடர்பாக வேலை செய்பவர்களுக்கும், அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். எல்லாவிதமான வாசனை பொருள்களும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு" என்றார் மருத்துவர் பிரசன்னகுமார்.
மாற்று இயற்கை வாசனைப் பொருள்கள் மற்றும் அறைத் தெளிப்பான் குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் கேட்டபோது ``இன்றைய சூழ்நிலையில் நாம் கடைகளில் வாங்கும் பொருள்கள் வேதியியல் ரசாயனங்களால் நிரம்பியுள்ளன. அவற்றைப் பயன்படுத்தும்போது தேவையற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படும். இதைத் தவிர்க்க, இயற்கைப் பொருள்களைத்தேடி நாம் பயணிக்க வேண்டும்.
இயற்கை வாசனை தெளிப்பானுக்கு திருநீற்றுப்பச்சிலையை நீரில் கலந்து பயன்படுத்தலாம். வாசனை மெழுகுவத்திக்கு பதில், நமது பாரம்பர்ய பொருளான இயற்கை சாம்பிராணியைப் பயன்படுத்தலாம். சாம்பிராணி வாங்கும்போது, அதன் தரத்தையும், முழுவதும் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டதா என்பதையும் கவனிப்பது முக்கியம். வாசனை திரவியம் உடல் நலத்தில் பிரச்னையை எற்படுத்தும் என்பதையும் தாண்டி, அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும். இதற்கு பதில், மூலிகைப் பொருளான ஜவ்வாது பயன்படுத்துவது சாலச்சிறந்தது.
கொசுவை விரட்ட நாம் கொசுவிரட்டி பயன்படுத்துவதைத் தவிர்த்து, பண்டைய முறையான வேப்பிலை, நொச்சி, குப்பைமேனி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டுக்கு வெளியே புகை போடுவது சிறந்த செயல். கொசுமட்டையையும் பயன்படுத்தலாம்.
இது ரசாயனப் பொருள்களின் காலம் என்றாகிவிட்ட நிலையில் நம் உடல்நலம் நமது கையில்தான் உள்ளது. ஆகவே எதைப் பயன்படுத்துவதற்கு முன்பும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது. மனஅமைதிக்காக என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளாமல் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பொருள்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்" என்று மருத்துவர் விக்ரம் குமார் அறிவுறுத்தினார்.
- அ. விஷ்ணுபிரியா
Comments
Post a Comment