புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ``ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொள்வதும் அவரை நீக்குவதும் தமிழக முதலமைச்சரின் விருப்பம். ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான விளக்கங்களைத் தருவார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லையா... என்று 2024 தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். அந்த அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
நாங்கள் சொல்லும் விதிமுறைகளின்படிதான் ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். அமைச்சரவையில் ஒருவரை நீக்குவதற்கு அவருக்கு உரிமை இருக்கா என்றால், கிடையாது. அவர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கிறார் என்று தெரியவில்லை. செந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொள்வதும் வைத்துக்கொள்ளாததும் முதலமைச்சரின் விருப்பமே, தவிர அது ஆளுநரின் விருப்பம் அல்ல.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள் ஒவ்வொருத்தரையும் விலக்கிக்கொண்டு போகிறேன் என்று சொன்னால்... அப்படிச் செய்ய முடியுமா, முடியாது. இது ஜனநாயக நாடு, ஆளுநரின் சர்வாதிகார நாடு இல்லை.
அ.தி.மு.க போன்ற பா.ஜ.க-வுக்கு அடிமைகளாக இருக்கும் கட்சியினர்மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்து மிரட்டி பணியவைக்க செய்யும். அவர்களின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை இருக்குமே தவிர காவல்துறையாகவோ பாதுகாப்புத் துறையாகவோ இருக்காது.
அமலாக்கத்துறை வழக்குகளின் நிலைமைகளை நாட்டு மக்கள் இன்று நன்றாகக் கவனித்து வருகின்றனர். அமலாக்கத்துறைக்காக நாங்கள் பயப்படப்போவது கிடையாது. நீதிமன்றம் இருக்கிறது, இன்னும் ஜனநாயகம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நீதி இருக்கின்றது என்ற நம்பிக்கையோடுதான் மக்கள் இருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்களைக் கைவைக்காது. ஐந்தாண்டுகள் மட்டுமல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதே நிலைதான்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது சில ஆவணங்களைத் தூக்கி வெளியே எறிந்தார்கள். அன்றைக்கு ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார். ஆவணத்தை வெளியே வீசுவதும், அப்படி வீசும்போது ஒருவர் எடுத்துக்கொண்டு ஓடும் வீடியோவும் வைரலானது. அதையே சாட்சியமாக வைத்து அப்போது விஜயபாஸ்கரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா.. என்பதை 2024-ல் மக்கள் முடிவுசெய்வார்கள்" என்றார்.
http://dlvr.it/SrSBML
http://dlvr.it/SrSBML
Comments
Post a Comment