சமீபகாலமாக ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அது குறித்து பல குழப்பங்களும், அது வேலையிழப்புக்கு காரணமாகுமோ என்ற அச்சமும், மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இதய நோய்களைக் கண்டறிய முடியும் என்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு செயல்படும் என்றும் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.
கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, செயற்கை நுண்ணறிவு மூலம் இதய நோயைக் கண்டறிய முடியும் என்றார். கூகுள் லென்ஸ் மூலம் நம்முடைய விழித்திரையை ஸ்கேன் செய்வதன் மூலம் இது சாத்தியம் என்று தெரிவித்திருந்தார்.
அதே போல் கூகுள் லென்ஸ் மூலம் ஒருவரின் வயது, அவர் புகைப்பழக்கம் உள்ளவரா.... எதிர்காலத்தில் அவருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையும் கண்டறியலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு, சுந்தர்பிச்சை தெரிவித்திருந்தார்.
இதெல்லாம் எந்தளவு சாத்தியம் என்று சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜிடம் பேசினோம்...
``இதய நோயைக் கண்டறிவதற்காக பல ஆண்டுகளாக இசிஜி பயன்படுத்தி வருகிறோம் தற்போது ஏஐ உதவியுடன் இசிஜி செயல்படத் தொடங்கியுள்ளது. நுண்ணறிவின் மூலம் அறிக்கை பெற முடிவதால், நோயாளிக்கு தாமதமின்றி சிகிச்சை கொடுக்க முடிகிறது. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இதயம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா... நோய்வாய்ப்பட்டிருக்கிறதா என்றுதான் கணிக்க முடியுமே தவிர, என்ன நோய் என்று தெளிவாகக் கண்டுபிடிக்க முடியாது.
சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றிலும் இதேநிலை தான். தற்போதிருக்கும் சூழ்நிலையில் மருத்துவருக்கும், மருத்துவக் கருவிகளுக்கும் ஏஐ தொழில்நுட்பம் உதவியாக இருக்குமே தவிர, மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக விளங்க முடியாது.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, மருத்துவத்தில் அதன் பங்களிப்பு ஆரம்பகட்டத்தில் உள்ளது. மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அதற்கேற்றவாறு தரவுகளுடன் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும்" என்றார்.
Comments
Post a Comment