நாக்கில் பிரச்னை என மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 வயது சிறுவனுக்கு, ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (circumcision surgery) செய்த மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரேலி மாவட்டத்தில் உள்ள எம் கான் மருத்துவமனைக்கு (M Khan Hospital), மூன்று வயதுக் குழந்தையை சிகிச்சைக்கு ஜூன் 23 அன்று கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது, நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, அங்குள்ள மருத்துவர்கள் குழந்தைக்கு ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையைச் செய்துள்ளனர்.
இதனை அறிந்த உறவினர்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பல இந்துத்துவ அமைப்புகள், நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தை அறிந்த அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரேலி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பல்பீர் சிங்குக்கு உத்தரவிட்டார்.
புகார் சரியானது என கண்டறியப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், அந்த மருத்துவமனையின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்யவும், முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதனிடையே டாக்டர்கள் குழு ஒன்று, மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தியது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களின் வாக்குமூலமும், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் சேகரிக்கப்பட்டன.
மருத்துவமனையின் அனைத்து ஆவணங்களும் கஸ்டடியில் எடுக்கப்பட்டதோடு, மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment