மூளையில் ஏற்படும் கட்டிகள் (Brain tumor) குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பெரிய அளவில் இல்லை. மூளைக்கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகளும் அடங்கும் என்றாலும், அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய்க் கட்டியாகிவிடாது. சாதாரண கட்டிகள்தான் இதில் பெரும்பான்மை.
மூளைக்கட்டிக்கான அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து, திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மதுசூதனன் விரிவாக விளக்குகிறார்...
``ரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைப்போல் மூளைப் புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் அதிகளவில் கலந்திருப்பது, பல்வேறு வகையான கதிர்வீச்சு, மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், மரபு இதற்கு அடிப்படை காரணங்களாக உள்ளன.
குறிப்பாக பெரும்பாலான மூளைக்கட்டி பாதிப்பிற்கு மரபணு தொடர்பான மாற்றங்களே காரணமாக இருக்கின்றன. இந்த மரபணு பாதிப்பிற்கு விண்ணில் இருந்து வரும் காஸ்மிக் கதிர் வீச்சுகள், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கதிர்வீச்சுகள் அடிப்படையானவை. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டிகள், ரசாயனங்களும் மூளைக்கட்டிகளை ஏற்படுத்துவதில் அதிக பங்கு பெறுகின்றன.
அறிகுறிகள் என்ன?
மூளையில் கட்டி ஏற்பட்டாலே அதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், மூளையில் ஏற்படும் 80% கட்டிகள் சாதாரண கட்டிகள், 20% கட்டிகள் மட்டுமே புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கின்றன. சாதாரண கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்திவிட முடியும்.
இன்றைய நவீன மருத்துவ வசதிகள் காரணமாக அறுவை சிகிச்சை மூலமோ, ஃபோக்கஸ்டு ரேடியேஷன் (Focused Radiation) சிகிச்சை மூலமாகவோ மூளையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளைக்கூட, 100% முழுமையாக குணப்படுத்திவிட முடியும். அதனால், மக்களுக்கு இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மூளையில் கட்டி ஏற்பட்டாலே அது புற்றுநோய்க் கட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக யாருக்கும் மூளைப் புற்றுநோய் வருவதில்லை. மூளைக்கட்டி ஒருவருக்கு இருந்தால் அவருக்கு தீராத தலைவலி ஏற்படும். காலையில் தூங்கி விழிக்கும்போது தலைவலி ஏற்ட்டாலோ, தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டாலோ, வலிப்பு நோய் இல்லாதவர்களுக்கு திடீரென வலிப்பு ஏற்படுவது, உடல் மரத்துப்போதல், கண் பார்வை குறைதல், கேட்கும் திறன் குறைதல் போன்றவை ஏற்பட்டாலோ மூளைக்கட்டியின் அறிகுறிகளாக இருக்கலாம்.
நீண்ட காலமாக ஒருவருக்கு தலைவலியோ, ஒற்றைத்தலை வலியோ இருந்தால் அது மூளைக்கட்டியாக இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து அதிகாலையில் தலைவலியும், வாந்தியும் சேர்ந்து ஏற்படும்போது, அது மூளைக்கட்டிக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
சிகிச்சை முறைகள்
மூளையில் ஏற்படும் கட்டிகளுக்கான சிகிச்சை, முதலில் அந்தக் கட்டியின் தன்மை என்ன என்பதைக் கண்டறிவதில் தொடங்குகிறது. மூளைக்கட்டிக்கான அறிகுறிகள் தென்பட்டால், முதலில் சி.டி ஸ்கேன் செய்து கட்டியை உறுதி செய்யலாம். 80% பேருக்கு சி.டி. ஸ்கேன் மூலமே கட்டி உறுதி செய்யப்படும். 20% பேருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் தேவைப்படலாம்.
சாதாரண கட்டியை தேவையைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கீ ஹோல் (Key-Hole) அறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபிக் (Endoscopy) சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட முடியும். சில காலம் முன்பு வரை, மூளைக்கட்டி சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு, உடல் செயலிழந்து போதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது நவீன ரோபாட்டிக் தொழில்நுட்பங்கள் வந்த பிறகு, மூளையில் உள்ள கை, கால் நரம்புகள், செவி மற்றும் கண்களுக்குள் செல்லும் நரம்புகளுக்கு அருகே கட்டி இருந்தாலும் அந்த உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கைகொடுக்கும் நவீன மருத்துவம்!
அறுவை சிகிச்சை மட்டுமல்லாது புற்றுநோய்க் கட்டிகளுக்கு கீமோ கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையிலும்கூட தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டிக்கு அருகில் உள்ள எந்த நரம்புக்கும் பாதிப்பு ஏற்படாமல், கட்டியை மட்டும் கதிர்வீச்சு மூலம் சரிசெய்ய முடியும். பிறந்த குழந்தைகளில் இருந்து முதியோர் வரை பலருக்கும் மூளைக்கட்டிகள் தற்போது காணப்படுகின்றன. இதில் குழந்தைகளுக்கு மரபு வழியாக இந்தக் கட்டிகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் மூளைக்கட்டிகள் வீரியமிக்கதாகக் காணப்படுகின்றன. 30 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் கட்டிகள் பெரும்பாலும் தீவிரம் குறைந்ததாக இருப்பதோடு, எளிதில் குணப்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
ரத்தப்புற்று நோய், மார்பகப் புற்றுநோய் போன்றவை பரவி மூளைக்கட்டியாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. இப்படிப் பரவக்கூடிய கட்டிகளை இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களது வாழ்நாளை நீட்டிக்கவும் முடியும்.
இன்றைய நவீன மருத்துவ சூழலில், மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டர்களின் நோய் தீர்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகையும் செய்யப்படும்" என்கிறார் மருத்துவர் மதுசூதனன்.
Comments
Post a Comment