கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக வென்றிருக்கிறது. 150 ரன்கள் டார்கெட்டை 13.1 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி சேஸ் செய்திருக்கிறது. இந்த அதிரடி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான்.
47 பந்துகளில் 98 ரன்களை எடுத்து அகத்தியிருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். யாஷஸ்வியின் இந்த அதிரடியை பார்த்து கிரிக்கெட் உலகை சார்ந்த பலருமே வியப்போடு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கும் போதே விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டிருந்தார். அதில்,
'சமீபத்தில் நான் பார்த்து வியந்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. யாஷஸ்வி, ஒரு பெரும் திறமையாளன்' என பதிவிட்டு யாஷஸ்வியின் புகைப்பட்டத்தையும் போட்டிருந்தார்.
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், 'மிகச்சிறப்பான இன்னிங்ஸ். மிகச்சிறப்பான வீரர். தலைவணங்குகிறேன்' என யாஷஸ்வியை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார் சூர்யா.
யாஷஸ்வியின் அதிரடியை பற்றியும் பட்லரின் ரன் அவுட் பற்றியும் பதிவிட்டிருந்த ஹர்ஷா போக்லே, 'இந்தளவுக்கு ட்ராமா நிறைந்த 3 ஓவர்களை நான் பார்த்ததே இல்லை.' என பதிவிட்டிருந்தார்.
கிரிக்கெட் விமர்சகரான ஜாய் பட்டாச்சார்யா, 'யாஷஸ்வி இந்திய அணிக்காக ஆட ஏற்கனவே தயாராகிவிட்டார்.' என பதிவிட்டிருந்தார்.
போட்டி முடிந்த உடனேயே கொல்கத்தா அணியின் டிவிட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் வந்தது. அதில், 'இது யாஷஸ்வியின் இரவு. நீங்கள் அருமையாக ஆடினீர்கள் யாஷ்!' என அடி வாங்கிய கொல்கத்தா அணியே யாஷை வாழ்த்தியிருந்தது. கொல்கத்தா அணியின் அட்மினை போன்றேதான் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவும் பேசியிருந்தார். 'யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டியே ஆக வேண்டும். அவர் என்ன நினைத்தாலும் நிஜமாகும் நாளாக இது அமைந்துவிட்டது.' என நிதிஷ் ராணா பேசியிருந்தார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில்,
'எனக்கு இன்றைக்கு செய்ய வேண்டிய வேலை எதுவுமே இல்லை. பந்துக்கு பேட்டை விட்டு சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து எதிர்முனைக்கு சென்று யாஷஸ்வியை வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் என்னுடைய வேலையாக இருந்தது.' என்றார்.
யாஷஸ்விக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, 'இந்த அதிவேக அரைசதத்திற்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது. உங்களின் திறன் உங்களை இன்னும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு கூட்டிச் செல்லும்.' என ட்வீட் செய்திருக்கிறார்.
யாஷஸ்வியின் அதிரடி இன்னிங்ஸை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்
Comments
Post a Comment