வேகமாக முன்னேறி வரும் மருத்துவ வளர்ச்சி, வாழ்நாள் மீதான நம்பிக்கையையும், நோய்களுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்துகின்றன. அந்த வகையில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்ட 'Multiple Sclerosis' எனப்படும் நரம்பியல் நோய், மருத்துவ முன்னேற்றத்தால் சமீப காலமாக இந்தியாவிலும் பரவலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.
மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள், நரம்பு மண்டலத்தின் வழியாகவே உடல் உறுப்புகளின் தசைகளுக்குச் சென்று சேரும். உடல் இயக்கத்தில் முக்கிய பங்காற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, அதன்மூலம் உடல் இயக்கத்தை முடக்கும் வீரியம் கொண்டது Multiple Sclerosis எனப்படும் 'எம்.எஸ்' பாதிப்பு. கேட்கவே அதிர்ச்சியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் 'ஷாக்கைக் குறைச்சுக்கிட்டு அச்சமின்றி வாழலாம்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்த நோய் குறித்த விழிப்புணர்வுக்காக மே 30-ம் தேதி 'சர்வதேச Multiple Sclerosis தின'மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து வயதினரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இந்த நோய் குறித்த முழுமையான வழிகாட்டுதல்களை வழங்குகிறார், சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர் வெங்கட்ராமன்.
'Multiple Sclerosis' என்றால் என்ன?
``நம் உடலில் நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்க வேண்டிய எதிர்ப்பு சக்தி, தவறுதலாக நம் நரம்பு மண்டலத்தைக் கிருமி மாதிரியாகவோ அல்லது அந்நியமாகவோ பாவித்து, நரம்பு மண்டலத்தைத் தொடர்ந்து பாதிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுதான் 'Multiple Sclerosis' எனப்படும். ஒருமுறை இந்த பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தால், அறிகுறிகள் தெரியாத வகையிலும், வெளிப்படையான அறிகுறிகளுடனும் தொடர்ந்து இந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குளிர்ப்பிரதேச நாட்டினருக்குத்தான் 'எம்.எஸ்' பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது.
இந்தியாவில் பொதுமக்களிடம் மட்டுமன்றி, மருத்துவத்துறை வட்டாரத்திலும்கூட இந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இந்த நோய் பற்றியும், 'எம்.எஸ்' பாதிப்பு வந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை வழிமுறைகள் குறித்தும் முறையாகத் தெரிந்து கொண்டால், இந்த நோயை அச்சமின்றி எதிர்கொள்ளலாம்.
`எம்.எஸ்' பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
* நம் மூளை நரம்புகளைச் சுற்றி, மையிலின் (Myelin) எனப்படும் பாதுகாப்பு உறை செயல்படும். இந்த உறையை அந்நியமாக நினைத்து, உடலைத் தாக்கும் எதிர்ப்பு அணுக்கள் 'மையிலின்' உறையைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான் நரம்பு மண்டலத்தில் 'எம்.எஸ்' பாதிப்பு ஆரம்பமாகிறது.
* இ.பி.வி எனப்படும் (Epstein – Barr Virus) வைரஸ், குழந்தைப் பருவம் மற்றும் வளரிளம் பருவத்தில் நம் உடலில் நுழையும்பட்சத்தில், அது தூண்டிவிட்டுச் செல்லும் தாக்கம் 'எம்.எஸ்' பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் கிருமி உடலிலிருந்து மறைந்தாலும்கூட, அது வந்து சென்ற தாக்கத்தினால் பிற்காலத்திலும் 'எம்.எஸ்' பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
* இந்த நோய் ஏற்படுவதற்கு ‘வைட்டமின் டி’ குறைபாடும் முக்கிய காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால், குளிர்ப்பிரதேச நாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
* 'நமக்கு ஆண்டு முழுக்க வெயில் சீராக இருப்பதால், இந்தியாவில் 'எம்.எஸ்' பாதிப்பு அதிகம் வர வாய்ப்பில்லைதானே?’ என்று பலரும் நினைக்கலாம். ஆனால், இந்தியாவில் ‘வைட்டமின் டி’ குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சூரிய வெளிச்சமே படாத வகையில் பலரின் வாழ்வியல் முறைகள் மாறிவருவது, புதுப்புது நோய் பாதிப்புகள் ஏற்பட காரணமாகின்றன. இதனாலும் நம் நாட்டில் 'எம்.எஸ்' பாதிப்பால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
* உணவுப் பழக்கம், தூக்கம், வாழ்வியல் முறைகள் போன்றவை சீரற்ற முறையில் இருக்கும்போது, குடலில் இருக்கும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் அழிந்துபோக வாய்ப்புள்ளன. இந்த நுண்ணுயிரிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையேயான தொடர்பு, இயல்புக்கு மாறாக எதிரெதிர் நோக்கத்துடன் வேலை செய்யும்போது, உடலுக்குக் கிடைக்க வேண்டிய எதிர்ப்பு சக்தி உடலுக்கு எதிராக வேலை செய்யும். இதுவும், 'எம்.எஸ்' பாதிப்பை உருவாக்கும் வைரஸ் கிருமிகளின் வரவுக்குக் காரணமாகலாம்.
எந்த வயதினரைத் தாக்கும்?
பெரும்பாலான நோய்கள் 50 வயதினரைக் கடந்தவர்களுக்குத் தான் ஏற்படும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அதனால், இளம்பருவத்தினர் நோய் பாதிப்புகள் குறித்து அஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனால், இந்த 'எம்.எஸ்' பாதிப்பானது 20 – 40 வயதினரைத்தான் பெரிதும் தாக்குகிறது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில், 80 சதவிகிதத்தினர் பெண்களாகவும், 20 சதவிகிதத்தினர் ஆண்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலும் பெண்களைத் தாக்கும் நோயாக இது இருந்தாலும், முன்னெச்சரிக்கை விஷயத்தில் ஆண்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
`எம்.எஸ்' பாதிப்புக்கான அறிகுறிகள்?
* வெளிப்படையான அறிகுறிகளுடன் 'எம்.எஸ்' பாதிப்பின் தாக்கம் இருக்கும்பட்சத்தில், மூளை, மூளையிலிருந்து வரும் தண்டுவடம், கண் நரம்புகள் மற்றும் முதுகுத் தண்டுவடம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.
* மூளை மற்றும் மூளைத் தண்டு வடத்தில் (Brain Stem) பாதிப்பு ஏற்பட்டால், நாம் பார்க்கும் பிம்பம் இரண்டாகத் தெரியலாம். மேலும், வாய் கோணுதல், நடையில் தள்ளாட்டம், கைகள் மற்றும் கால்களில் மரத்துப்போன உணர்வு, பக்கவாதம் வந்ததுபோல உடல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.
* கண்களுக்குச் செல்லும் நரம்புகளில் தாக்குதல் ஏற்பட்டால், பார்வைக்கோளாறு, பார்வை மங்கலாகத் தெரிவது, பார்வைத்திறனில் நிற மாறுபாடுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
* மூளை, மூளையிலிருந்து வரும் தண்டுவடம், கண் நரம்புகள் ஆகிய பகுதிகளைச் சுற்றி அல்லது உடலின் மற்ற பல பகுதிகளில் எவ்வித அறிகுறிகளும் தெரியாத வகையில் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
* லேசான அறிகுறிகளுடன் இந்த நோய் வரலாம். உதாரணமாக, வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஏதாவதொரு பகுதியில் உணர்வுகள் இல்லாமல் இருப்பது; கைகள் மற்றும் கால்களில் அடிக்கடி மரத்துப்போன உணர்வு ஏற்படுவது; மரத்துப்போன உணர்வு பல நாள்கள் நீடிப்பது; உடலில் அடிக்கடி சோர்வு அல்லது சுணக்கம் ஏற்படுவது.
மேற்கண்ட அறிகுறிகளோ அல்லது உடலில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்களோ ஏற்பட்டால், தாமதிக்காமல் நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும்.
பாதிப்பின் நிலைகள் (Stages) :
எம்.எஸ் பாதிப்பு, Inflammatory stage மற்றும் Degenerative stage என இரண்டு வகைப்படும்.
'எம்.எஸ்' பாதிப்புக்கான அறிகுறிகளாகக் கூறிய எல்லா பாதிப்புகளுமே, Inflammatory stage எனப்படும் முதல் நிலையில்தான் தென்படும். அந்த நேரத்திலேயே சிகிச்சை பெறத் தொடங்கினால், இரண்டாம் நிலையான Degenerative stage வரை செல்லாமல் தடுக்க முடியும். ஒருவேளை பாதிப்பின் தன்மை இரண்டாம் நிலைக்குச் சென்றுவிட்டால், இயல்பான நடை, ஓட்டம், வழக்கமான செயல்பாடுகளில் உத்வேகம் அல்லது சுறுசுறுப்பு குறைந்து சம்பந்தப்பட்ட நோயாளி வீல்சேரில் முடங்கவும் வாய்ப்புள்ளது.
நிரந்தமாகக் குணப்படுத்த முடியுமா?
இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு வெளிப்படையான மாற்றங்கள் தெரியும்போது, உடனடியாக இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 3 - 5 தினங்களுக்குக் கொடுக்கப்படும். அதன்பிறகு, இந்த நோய் மீண்டும் மூளை நரம்புகளைத் தாக்காமல் இருப்பதற்கு, Disease modification therapy எனும் சிகிச்சை தரப்படும். இதற்கான சிகிச்சை வழிமுறைகள் பல வகைப்படும். நோயாளியின் தன்மையைப் பொறுத்து, மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
உணவு மற்றும் வாழ்வியல் முறைகள் :
* முறையான சாப்பாடு, சரியான தூக்கம், உடல்நலனை பாதிக்கும் பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.
* 'எம்.எஸ்' பாதிப்பு உடையவர்கள், சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலத்திலும், கூடுமானவரை வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.
* வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
* அசுத்தமான கழிவறைகளைத் தவிர்க்க வேண்டும்" என்று பயனுள்ள ஆலோசனைகளைக் கூறுகிறார் மருத்துவர் வெங்கட்ராமன்.
வரும்முன் காப்போம்... 'எம்.எஸ்' பாதிப்பை வெல்வோம்!
Comments
Post a Comment