"அந்தக் கடைசி ஓவரின் போது என்னுடைய இதயத்துடிப்பு 200 ஐ தொட்டுவிட்டது!" என அதிர்ச்சி விலகாமல் பேசியிருக்கிறார் நேற்றைய நாளின் நாயகன் வருண் சக்கரவர்த்தி.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெரிதாக சுவாரஸ்யம் எதுவும் இருக்கப்போவதில்லை என நினைக்கப்பட்ட இந்தப் போட்டி அந்த அத்தனை எண்ணங்களையும் முறியடித்திருக்கிறது.
ஆம், கடைசிப்பந்து வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியே.
கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்களை எடுத்திருந்தது. சன்ரைசர்ஸூக்கு 172 ரன்கள் டார்கெட். சேஸிங்கின் போது சன்ரைசர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் ரன்ரேட்டையும் சரியாக மெயிண்டெயின் செய்து வந்தனர். கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் மட்டும்தான் தேவை. க்ரீஸில் அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் நல்ல செட்டில் ஆகி நின்றார். இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடக்கூடிய இளம் வீரர் அப்துல் சமத் நின்றார். இப்படிப்பட்ட இருவர் 5 ஓவர்களில் 37 ரன்களை அடித்தால் போதும் என்பது இருப்பதிலேயே மிக மிக எளிமையான டாஸ்க். ஆனால், அந்த எளிமையான டாஸ்க்கை அவர்களை முழுமையாக செய்ய விடாமல் பெரும் தடையாக இருந்து முட்டுக்கட்டைப் போட்டவர் வருண் சக்கரவர்த்தியே.
அந்த கடைசி 5 ஓவர்களில் 3 ஓவர்களை இவர்தான் வீசியிருந்தார். இந்த 3 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இந்த 12 ரன்களிலும் 4 ரன்கள் லெக் பை மற்றும் பையின் மூலமாகவே சென்றிருந்தது. ஆக, வருண் சக்கரவர்த்தியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது 8 ரன்கள் மட்டும்தான். இந்த மூன்று ஓவர்களில் இரண்டு ஓவர்கள் ரொம்பவே முக்கியமானது.
12வது ஓவரை வருண் சக்கரவர்த்தியே வீசியிருந்தார். இந்த ஓவரில் 12 ரன்களை அவர் விட்டுக் கொடுத்திருந்தார். எய்டன் மார்க்ரம் இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து வருணைக் கடுமையாக அட்டாக் செய்திருந்தார். இதன்பிறகு, வருண் 16வது ஓவரில்தான் மீண்டும் வந்தார். அந்த 16வது ஓவரிலும் எய்டன் மார்க்ரம் க்ரீஸில் இருந்தார். ஆனால், இந்த ஓவரில் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
வருணுக்கு எதிராக இந்த ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்ட மார்க்ரம் 2 ரன்களை மட்டுமே எடுத்தார். சமத்தும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆக, மொத்தமாக இந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே வருண் கொடுத்திருந்தார்.
கடும் சிக்கனமாக வீசப்பட்ட இந்த ஓவருக்கு அடுத்து வைபவ் அரோரா வீசிய அடுத்த ஓவரிலேயே மார்க்ரம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். வருண் காட்டிய சிக்கனத்திற்கு கிடைத்த பரிசு அது.
இதன்பிறகு, கடைசி ஓவரில் சன்ரைசர்ஸை 9 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை. அப்துல் சமத்தின் பேட்டில் ஒரு பந்து சிக்கினால் போதும். சிக்ஸராக்கி விடுவார். பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிங்கிள் தட்டி ஆட்டத்தை முடித்துவிடுவார்கள். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் பிட்ச்சின் வடிவமைப்பை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் வருண். கடைசி ஓவரில் க்ரீஸில் நின்ற அப்துல் சமத், புவனேஷ்வர் இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள்.
இவர்களின் லெக் சைடில் பவுண்டரிகளின் தூரம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதாவது, ஸ்கொயர் பவுண்டரி 65 மீட்டரிலும் டீப் மிட் விக்கெட் 75 மீட்டர் தூரத்திலும் இருந்தது. அதேநேரத்தில், ஆப் சைடில் பாயிண்ட் பவுண்டரி 62 மீட்டர் தூரத்திலும் டீப் எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரி 71 மீட்டர் தூரத்திலும் இருந்தது. ஆஃப் சைடை விட லெக் சைடில் பவுண்டரியின் தூரம் நான்கைந்து மீட்டர் அதிகம் இருந்தது.
இதைப் பயன்படுத்த நினைத்த வருண் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து மிடில் & லெக் ஸ்டம்பைக் குறிவைத்து பேட்ஸ்மேன்களை லெக் சைடிலேயே ஆட வைத்தார். இந்த வியூகத்திற்குப் பலனும் கிடைத்தது.
கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் அப்துல் சமத் டீப் மிட் விக்கெட்டில் அதாவது இருப்பதிலேயே அதிக தூரமுள்ள அந்த 75 மீட்டர் பவுண்டரியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அத்தோடு ஆட்டமும் கொல்கத்தா பக்கமே வந்து சேர்ந்தது. அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து கொல்கத்தாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார் வருண்.
வருண் சக்கரவர்த்தியைப் பொறுத்தவரை 2020 சீசன் அவருக்கு பெரும் வெற்றிகரமான சீசனாக இருந்தது. 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். எக்கானமியும் 6-ஐ சுற்றிதான் இருந்தது. அடுத்த சீசனிலுமே 17 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எக்கானமியும் அதேபோல 6-ஐ சுற்றிதான் இருந்தது. ஆனால், கடந்த சீசன் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அந்த சீசனில் 11 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். எக்கானமி 8.5 க்கும் மேல் இருந்தது.
இடையில் இந்திய அணிக்குத் தேர்வாகி சரியாக ஆடாதது, காயங்களில் சிக்கி ஏமாற்றம் அளித்தது என அவர் பல சறுக்கல்களை எதிர்கொண்டார். ஒரு 'ஒன் சீசன் வொண்டர்' போலத்தான் வருண் பார்க்கப்பட்டார். ஆனால், அதையெல்லாம் முறியடித்து தான் நீண்ட காலத்திற்கான வீரர் என்பதை இந்த சீசன் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்
இதுவரை 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கொல்கத்தா அணிக்காக இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பவரும் வருண்தான்.
டெத் ஓவர்கள் என எடுத்துக் கொண்டாலும் அதிலுமே சன்ரைசர்ஸூக்கு எதிரான வருணின் பெர்ஃபார்மென்ஸ் ஒரு கம்பேக் பெர்ஃபார்மென்ஸ்தான். ஏனெனில், குஜராத்துக்கு எதிரான கடந்த போட்டியில்தான் 17வது ஓவரை வீசி 24 ரன்களை கொடுத்திருந்தார். விஜய் சங்கர் வருணின் பந்துகளை வெளுத்தெடுத்தார். அதிலிருந்து மீண்டு வந்துதான் சன்ரைசர்ஸூக்கு எதிராக இப்படி ஓர் ஆர்ப்பாட்டமான பெர்ஃபார்மென்ஸை கொடுத்திருக்கிறார் வருண்.
வருண் மேலும் மேலும் வெல்லட்டும்!
Comments
Post a Comment