``இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது" என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகளும், பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, எஸ்.டி.பி.ஐ, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருப்பது மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இஸ்லாமிய வெறுப்பை உமிழும் `தி கேரளா ஸ்டோரி':
`தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை விபுல் ஷா தயாரிக்க, மேற்கு வங்க இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் `கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல' காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், படத்தின் டீசர் வெளியானபோதே கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, `உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்ற பெயரில், எவ்வித ஆதாரமும் இல்லாமல் 32,000 இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து, தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்ததுபோலவும், எதிர்காலத்தில் கேரள மாநிலமே இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடும்' என்பதுபோன்ற முற்றிலும் உண்மைக்குப் புறம்பான சம்பவங்களையும் வசனங்களையும் காட்சியமைத்து, இஸ்லாமிய வெறுப்பை கக்கியிருப்பதாக கேரள கம்யூனிஸ்ட், காங்கிஸ் உட்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பும் போராட்டமும்:
குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், ``எவ்வித உண்மையும் ஆதாரமும் இல்லாமல், போலிக் கதைகள்கொண்ட திரைப்படங்கள் மூலம் பிரிவினைவாத அரசியலைப் பரப்புவதற்கு முயலும் சங் பரிவார் அமைப்புகளின் தொழிற்சாலையில் உருவானதுதான் இந்த `கேரளா ஸ்டோரி’ திரைப்படம்" என விமர்சித்தார்.

அந்த நிலையில், `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து நீதிமன்றங்களும் அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டன. அதேசமயம், தமிழ்நாட்டில் கேரளா ஸ்டோரி வெளியாகவிருக்கும் திரையரங்குகள், மால்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஐ.ஜி சைலேந்திர பாபுவின் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, எஸ்.டி.பி.ஐ, நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள திரையரங்குகளில் எங்கெல்லாம் `கேரளா ஸ்டோரி' படம் வெளியானதோ அங்கெல்லாம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பேர்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
பிரதமர் மோடியின் பாராட்டு:
இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ``தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவுக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியிருக்கிறது. சமூகத்தில் புரையோடும் ஒரு புதுவித பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தியிருக்கிறது. அதில் தீவிரவாதத்தால் ஏற்படும் விளைவுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. கேரளா போன்ற அழகான மாநிலத்தில், பயங்கரவாதம் எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என அந்த திரைப்படம் பேசுகிறது. ஆனால், காங்கிரஸ் அந்தப் படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவ முயல்கிறது. தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்களை தாண்டி புதியமுகம் இருக்கிறது. அதை அந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது!" என கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

அதற்கு தி கேரளா ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா, ``பிரதமர் மோடி எங்கள் படம் குறித்துப் பேசியது மட்டுமின்றி, நாங்கள் படம் முழுக்க அடிக்கோடிட்டு காட்ட விரும்பிய விஷயத்தையே அவரும் பேசியிருக்கிறார். இந்தப் படம் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான படம் மட்டுமே. இது எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ தவறாகச் சித்திரிக்கவில்லை. எங்களது இந்த நிலைப்பாட்டை பிரதமரும் நிரூபித்திருக்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு?" என பூரிப்படைந்திருக்கிறார்.

அதையடுத்து பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டிருக்கிறார். பா.ஜ.க-வின் இந்தச் செயல்பாடுகள் எதிர்ப்பாளர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்தியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க அரசு மட்டுமல்லாமல், (தமிழ்நாடு) மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க அரசும், தி காஷ்மீர் ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதி வழங்கியிருப்பதால் தமிழ்நாட்டு அரசின்மீதும் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறிப்பாக தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், ``தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரிப்பது, அவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளரா அல்லது இயக்குநரா என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு தமிழ்நாட்டில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தைத் திரையிட தொடர்ந்து அனுமதிப்பது தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க வழிவகுத்துவிடும். எனவே, உடனே இதற்கு தடைவிதிக்க வேண்டுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``பிரதமர் மோடி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியிருப்பது சரியல்ல. குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான இந்தப் படத்தை பிரதமரே ஆதரித்துப் பேசுவது வேதனையாக இருக்கிறது. தேர்தல் சமயத்தில் இது போன்ற சர்ச்சையான படங்களை வெளியிடுவது எவ்விதத்திலும் சரியாக இருக்காது. இதுபோன்ற படங்களை எடுக்கும் போதே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் இத்தகைய படங்களை ஆதரிப்பது தவறு. இதைத்தான் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் செய்து கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதச் செயல்களைச் செய்து வருவதே பா.ஜ.க-தான்" என குற்றம்சாட்டியிருக்கிறார்.
Comments
Post a Comment